காற்றில் பறக்கும் அரசு உத்தரவு பர்கூர் மலைவாழ் மாணவர்களிடம் அரசு பஸ்சில் கட்டணம் வசூலிப்பு

ஈரோடு, ஜூன் 13:  பஸ் பாஸ் தேவையில்லை பள்ளி சீருடையில் இருந்தால் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்ட பிறகும் பர்கூர் மலைப்பகுதியில் மலைவாழ் மாணவர்களிடம் போக்குவரத்து கழகம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது வீடுகளில் இருந்து பள்ளிக்கு அரசு பஸ்களில் இலவசமாக சென்று வர பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக முறையாக பஸ் பாஸ் வழங்கப்படுவதில்லை. பஸ் பாஸ் ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படும் என கூறிய அரசு கடந்த கல்வியாண்டில் கடைசி வரை பஸ் பாஸ் வழங்க இல்லை. இந்நிலையில், இந்த கல்வியாண்டிலும் பஸ் பாஸ் வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர வசதியாக பள்ளி சீருடையில் இருந்தால் எவ்வித கட்டணமும் அரசு போக்குவரத்து கழகம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

அந்தியூர் தாலுகாவிற்கு உட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் கொங்காடை, பட்டேபாளையம், கோயில் நத்தம், ஓசூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் பர்கூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு படிக்க செல்கின்றனர்.
Advertising
Advertising

இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாணவர்களிடம் கட்டாய கட்டணம் வலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் நடராஜ் கூறியதாவது: மலைப்பகுதி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவது என்பதே இயலாத காலகட்டத்தில் பல தடைகளையும் தாண்டி பள்ளிக்கு வருகின்றனர். ஆனால், மலைப்பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களில் மாணவர்களிடம் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ் பாஸ் இல்லாவிட்டாலும் பள்ளி சீருடையில் இருந்தால் கட்டணம் வசூலிக்க கூடாது என அரசு உத்தரவிட்ட போதிலும் அந்த உத்தரவு அந்தியூர் போக்குவரத்து கிளை அலுவலகத்தை கட்டுப்படுத்தாமல் உள்ளது. கொங்காடை முதல் பட்டேபாளையம் மற்றும் கோயில்நத்தம் முதல் ஓசூர் வரை இயக்கப்படும் பஸ்களில் தினமும் காலை, மாலை ரூ.15 கட்டணம் செலுத்தி தான் மாணவர்கள் சென்று வர வேண்டி உள்ளது. சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருக்கும் மலைவாழ் மக்களிடம் அரசு போக்குவரத்து கழகம் அரசின் உத்தரவை மீறி கட்டணம் வசூலிப்பது வேதனைக்குறியது. இது தொடர்பாக அந்தியூர் போக்குவரத்து கிளையில் புகார் செய்தும் பலனில்லை. வேறுவழியின்றி மாணவர்கள் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று தான் படித்து வருகின்றனர். இவ்வாறு நடராஜ் கூறினார்.

Related Stories: