முறையாக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன்

துறையூர், ஜூன் 12: துறையூர் ஒன்றியத்தில் உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி காளிப்பட்டி கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஒரு மணி நேரம் காத்திருந்து மனுவை அளித்தனர். துறையூர் அருகே காளிப்பட்டி கிராமத்தில் பல மாதமாகவே குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. இதையடுத்து காளிப்பட்டி கிராம மக்கள் துறையூர் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் புகார் மனு அளித்ததற்கு, 6 மாதம் முன்பு ஊராட்சி நிர்வாகமே ஒரு இடத்தை தேர்வு செய்து போர்வெல் அமைத்தது. இருப்பினும் அதில் தண்ணீர் குறைவாகவே வந்தது. பின்னர் 10 நாளில் போர்வெல்லில் தண்ணீர் இல்லாமல் மீண்டும் குடிநீர் பற்றாக்குறை ஆகிவிட்டது. இது குறித்து பொதுமக்கள் துறையூர் ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேரில் சென்று கேட்டால் இன்னும் 2 நாட்களில் போர்வெல் அமைக்கப்படும் எனக்கூறி காலம் தாழ்த்தி வந்தனர். இது பற்றி ஊராட்சி செயலாளரிடம் கேட்டதற்கு காளிப்பட்டிக்கு அதிமான போர்வெல் அமைத்துவிட்டோம். இனிமேல் உங்கள் கிராமத்திற்கு போர்வெல் அமைக்க முடியாது என கூறிவிட்டார். அதுபோல் ஒரு வருடத்திற்கு முன்பு மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்த ஊராட்சி நிர்வாகம் புதிதாக நீர்த்தேக்கத்தொட்டி அமைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீர்தேக்கத்தொட்டி இல்லாததால் முறையாக குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. மேலும் தற்போது 4 நாட்களுக்கு ஒரு முறை 10 குடம் குடிநீர் கிடைக்கிறது. இதனை புகார் மனுவாக பொதுமக்கள் அளிக்கவும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் காளிப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று துறையூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகள் வராததால் ஒரு மணிநேரம் காத்திருந்து அலுவலகத்தில் மனுவை அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: