துறையூரில் பரபரப்பு “காவிரிக்கு மாற்று காவிரியே” என்ற கோஷத்துடன் ராசி மணலில் அணைக்கட்ட விவசாயிகள் விழிப்புணர்வு பயணம் திருச்சி வந்தது விவசாய சங்கத்தினர் வரவேற்பு

திருச்சி, ஜூன் 12: தமிழக-கர்நாடகா எல்லையான தமிழக எல்லைக்குள் அமைந்துள்ள ராசி மணலில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு பிரசார பயணத்தை நேற்று முன்தினம் துவக்கினர். அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்தி பூம்புகாரில் செங்கல் எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். திருவாரூர், தஞ்சை மாவட்டம் வழியாக அக்குழுவினர் நேற்று திருச்சியை வந்தடைந்தனர்.

Advertising
Advertising

திருச்சி ரங்கம் அம்மா மண்டபம் வந்த அவர்களுக்கு பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், ‘ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ராசிமணலில் அணைக்கட்டக் கோரி செங்கல் எடுத்துச் செல்லும் நிகழ்வு நடந்து வருகிறது. நாளை (இன்று) ராசிமணலில் இப்பயணம் பூர்த்தியாகிறது. விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கவும், தமிழக மக்கள் குடிநீர் தேவைக்கும் இப்போராட்டம் வெற்றி பெற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு முழு ஆதரவு அளித்து துணை நிற்கும். பாண்டியன் எந்த நடவடிக்கை எடுத்தாலும் உற்ற நண்பனாக இருப்போம். முழு பங்கெடுப்போம்.  பயணம் வெற்றியடை வேண்டும். ஆட்சியாளர்கள், கர்நாடகா அரசு ஆதரவு அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மே மாதம் மாநில மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றி உள்ளோம். முதல்வரிடமும் வலியுறுத்துவோம்’ என்றார்.

பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ‘காவிரிக்கு மாற்று காவிரியே. ராசிமணல் அணைக்கட்ட தமிழக அரசு உடனடியாக பணிகளை துவங்க வேண்டும். மத்திய அரசு உரிய அனுமதி அளிக்க வேண்டும். கர்நாடகா அரசு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் ராசிமணலில் அணை கட்ட தமிழக அரசுக்கு முழு உத்தரவாதம், ஆதரவை அளிக்க வேண்டும். அங்கு அணை கட்டினால் சென்னை உள்பட 11 மாநகராட்சி, 25 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீர் பிரச்னை தீரும். 24 லட்சம் ஏக்கர் விளை நிலம் முழுமையான பாசனத்தை பெறும். அதற்கு ராசிமணலில் அணைகட்ட வேண்டும்.

அதற்கு உரிய சட்ட நடைமுறைகள் தமிழகத்துக்கு உள்ளது. தமிழகத்தில் ஓடும் தண்ணீரை தடுத்து தமிழகம் அணையிட்டுக்கொள்ள சட்டப்படி நமக்கு உரிமை உள்ளது. நமக்கு வரக்கூடிய தண்ணீரை கர்நாடகம் மேகதாதுவி–்ல் கட்டி தடுப்பதற்கு சட்ட உரிமை கிடையாது என்பதை எடுத்துரைக்கும், ஒன்றுபடுத்தும் ஒத்தக்கருத்தை தெரிவிக்கும் இப்பயணத்துக்கு வணிகர் சங்கம், அனைத்து கட்சியினர் ஆதரவு அளித்துள்ளனர். எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை துவங்கும் என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறோம்’ என்றார். ரங்கம் அம்மா மண்டபத்தில் பூஜை செய்து அங்கிருந்து கல் எடுத்துக் கொண்டு அக்குழுவினர் ராசிமணல் நோக்கி புறப்பட்டனர்.

Related Stories: