கோப்பு ஊராட்சியில் கடந்தாண்டு ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராத பூங்கா

திருச்சி, ஜூன் 12: அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள கோப்பு ஊராட்சியில் கடந்தாண்டு தமிழக முதல்வரின் சிறப்பு நிதியாக ரூ.30 லட்ச மதிப்பில் அம்மா பூங்கா கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளபட்டு பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. இந்த பூங்காவில் மின் விளக்குடன் கூடிய நடைபயிற்சி பாதை, கூடைப்பந்து விளையாடும் பகுதி, சிறுவர் ராட்டினங்கள் ஊஞ்சல்கள், உடற்பயிற்சி கூடம், பொதுமக்கள் பயன்படுத்திகொள்ளும் வகையில் கழிவறை உள்ளிட்டவை அடங்கும். இந்த பணிகள் முடிந்து ஒரு வருடமான நிலையில் இந்த பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக வரவில்லை.

மேலும் இந்த பூங்காவிற்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக மின் இணைப்பும் வழங்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் நடைபயிற்சி செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள கழிவறைகள் உடைந்த நிலையில் இருப்பதால் கழிவறையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் நடைபாதை ஓரத்தில் வைக்கப்பட்ட செடிகளும் பராமரிப்பின்றி காய்ந்துள்ளது. இந்த பூங்கா கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராததால், அரசின் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே இந்த பூங்காவிற்கு முறையாக மின் இணைப்பு கொடுத்து பூங்காவை திறக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: