காரைக்கால் காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணி தொடங்கியது

காரைக்கால், ஜூன் 12: காரைக்கால் பாரதியார் வீதி, மாதாகோவில் வீதியை தொடர்ந்து, காமராஜர் சாலையில், சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடங்கியது. காரைக்கால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் 30ம் தேதி மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தலைமையில் மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு கூட்டம் கூட்டப்பட்டு, நகர் பகுதியில் உள்ள சாலை மற்றும் நடை பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே 3ம் தேதி காரைக்கால்

பாரதியார் சாலை, நேரு வீதி, தோமாஸ் அருள் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு அதிரடியாக அகற்றப்பட்டது. பாரதியார் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெறும்போது, வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
Advertising
Advertising

பின்னர், மாவட்ட கலெக்டர் மற்றும் வணிகர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்து வணிகர்களுக்கு எச்சரிக்கை செய்வதென்றும், குறிப்பிட்ட நாளில் வணிகர்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், காரைக்கால் காமராஜர் சாலையில் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதை அறிந்த மாவட்ட நிர்வாகம், நகராட்சி மூலம் அங்கும் ஆக்கிரமிப்பு குறித்த அளவீடு செய்யும் பணியை தொடங்கும்படி உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, நேற்று நகராட்சி ஆணையர் சுபாஷ் தலைமையில் மார்க்கெட் வீதி, காமராஜர் சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்து மஞ்சள் குறியீடு செய்யும் பணி தொடங்கியது.  இது குறித்து ஆணையர் சுபாஷ் கூறுகையில், அளவீடு செய்யப்பட்டுள்ளது குறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்பு செய்யப்படும். அதன்பிறகும் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், நகராட்சி மூலம் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்படும் என்றார்.

Related Stories: