காலாப்பட்டு மத்திய சிறையில் மேலும் 3 செல்போன்கள் பறிமுதல்

காலாப்பட்டு, ஜூன் 12: புதுவை காலாப்பட்டு மாத்தூர் சாலையில் மத்திய சிறை உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அங்கிருந்தபடியே வெளியே உள்ள கூட்டாளிகளுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. இதனை தடுக்க சிறையில் ஜாமர் கருவியை சிறைத்துறை நிர்வாகம் பொருத்தி இருந்தாலும், அதனையும் மீறி விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி இதுபோல் பேசி வருகின்றனர். இந்நிலையில், சிறைக்கு புதிய சூப்பிரெண்டாக கோபி என்பவர் கடந்த 2 மாதத்திற்கு முன் பொறுப்பேற்றார். அவர், சிறையில் கைதிகள் செல்போன் பேசுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக அடிக்கடி கைதிகளின் அறைகளில் சோதனை நடத்தி வருகிறார். அதன்படி கடந்த 8ம் தேதி கைதிகளின் அறைகளில் சோதனை நடத்தியதில் 3 செல்போன்கள், 5 பேட்டரிகள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்து காலாப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் சிறை சூப்பிரெண்டு கோபி தலைமையிலான அதிகாரிகள், கைதிகளின் அறைகளில் சோதனையிட்டனர். அப்போது புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்த ரவுடி சத்யா அடைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், நெட்டப்பாக்கம் பெண் கொலை வழக்கில் கைதான சிவக்குமார் என்பவரின் அறையில் இருந்து ஒரு செல்போன் மற்றும் பேட்டரிகள் சிக்கின. மேலும், இன்னொரு கைதி அறையில் இருந்தும் ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டது. இது குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: