600க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தனியார் பள்ளிக்கு நிகராக சாதிக்கும் மடுகரை அரசு பள்ளி

நெட்டப்பாக்கம், ஜூன் 12: தமிழ்நாடு, புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இதனால் அரசு பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி அடுத்த மடுகரையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி கடந்த 4 ஆண்டுகளாக 400க்கும் அதிகமான மாணவர்களுடன் புதிய சாதனை படைத்து வருகிறது. 2009-2010ம் கல்வியாண்டுக்கு முன் 400 மாணவர்களுக்கும் கூடுதலாக பயின்ற இப்பள்ளி, எதிர்பாராதவிதமாக சரிவை காண தொடங்கியது. 2014-2015ம் கல்வியாண்டில் 310 மாணவர்களுடன் செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் எழுச்சி பெற்று 2015-2016ல் 400 மாணவர்களும், 2016-2017ல் 465 மாணவர்களும், 2018-2019ல் 550 மாணவர்களும் இருந்தனர். தற்போதைய 2019-2020ல் அதிகளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை 600ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வித்தரம் இப்பள்ளியில் சிறப்பாக இருப்பதால் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இப்பள்ளி தமிழகத்தின் எல்லை பகுதியில் அமைந்திருப்பதால் தமிழக கிராமங்களை சேர்ந்த மாணவர்களும் இங்கு அதிகளவில் சேர்ந்து பயில்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியை, 14 ஆசிரியைகளின் சிறப்பான பயிற்றுவித்தலாலும், மாணவர்கள் நலன் மீது கொண்ட அக்கறையினாலும் இச்சாதனை சாத்தியமாகி இருக்கிறது.

இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி கூறுகையில், இப்பள்ளியில் திறமையான பயிற்சிபெற்ற ஆசிரியைகளை கொண்டு, கணினி வழிக்கல்வி, செயல்திட்ட வழிக்கல்வி, சிபிஎஸ்சி ஆங்கில வழிக்கல்வி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. தூய்மையான கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், மதிய உணவு, சீருடை, கல்வி உபகரணம், கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது. கல்வியோடு மாணவர்களுக்கு ஓவியம், நடனம், பாட்டு, யோகா, வாழ்க்கை கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பல பரிசுகளை எங்கள் மாணவர்கள் பெற்றுள்ளனர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தூய்மை, ஒழுக்கம், எழுத்துத்திறன், பொது அறிவு திறன், ஆங்கில புலமை போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர்களை கொண்டு சுழற்கேடயம், பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. காலாப்பட்டில் உள்ள மத்திய அரசின் உண்டு உறைவிட பள்ளியான நவோதயா பள்ளியில் சேர கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 22 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். மாதம்தோறும் பெற்றோர்களை அழைத்து மாணவர்களின் நிலை குறித்து தெரிவிக்கிறோம். மேலும் புதுவை எல்லைப்பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மாணவர்களை, அவர்கள் செல்லும் வழித்தட பேருந்துகளில் ஆசிரியைகளே நேரடியாக சென்று வழியனுப்பி வைக்கின்றனர் என்றார்.

Related Stories: