மணக்குப்பம் அரசு பள்ளியில் திருட்டு

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 12: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மணக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வாட்ச்மேன் அருணாசலம் 8 மணிக்கு பள்ளி அறைகளை திறந்துள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் அறை, சமையலறை, கணினி அறை உள்ளிட்ட அறைகளின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாட்ச்மேன் தலைமை ஆசிரியரிடம் சென்று கூறியுள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்த அறைகளை பார்வையிட்டனர். இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பிரிண்டரை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த பள்ளியில் ஏற்கனவே 3 முறை திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் 15 ஆயிரம் பணம், அரிசி, பருப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது குறிப்பிடத்தக்கது. நேற்று ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பிரிண்டரை திருடிச் சென்றுள்ளனர். ஒரே பள்ளியில் தொடர்ந்து 4 முறை திருட்டு சம்பவம் நடைபெற்றது அப்பகுதி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடந்த மூன்று திருட்டு சம்பவங்கள் குறித்தும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு முறையான நடவடிக்கை இல்லாததாலே ஒரே இடத்தில் போலீசாருக்கு சவால் விடும் வகையில் திருட்டு சம்பவம் நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: