இன்று எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு விழுப்புரம் மாவட்டத்தில் பெருகிவரும் குழந்தை தொழிலாளர்கள்

விழுப்புரம், ஜூன். 12: இன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கும் நிலையில் தமிழகத்திலேயே அதிக கிராமப்புறங்கள், ஏழை, எளிய மக்கள் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் முற்றிலும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும். மேலும் அதிகாரிகள் பெயரளவிலான ஆய்வு இல்லாமல் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகளின் வருமானம்,  குடும்பத்திற்கு அவமானம் என்ற வாசகங்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரசாரத்தில் இருந்தாலும் இன்றளவும் வேலையிடங்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளின் முழு நேர வேலை பள்ளிக்கு செல்வதும், படிப்பதும்தானே தவிர வேலைக்கு செல்வதல்ல. பள்ளி விளையாட்டு மைதானங்களில் இருக்க வேண்டிய குழந்தைகள் செங்கல், சுண்ணாம்பு சூளைகளிலும், சுரங்கங்களிலும், பட்டாசு தொழிற்சாலைகளிலும் பஞ்சு ஆலைகளிலும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். உலகளவில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது இன்றளவும் குற்றமாக உள்ளது. சிறு வயதிலே பணிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மனநலனில் பிரச்னைகள் வருவதாகவும் விரைவில் மது, புகையிலை போன்ற தீய பழக்க வழக்கத்திற்கு ஆளாகின்றனர் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. விவசாயம், தீப்பெட்டி, செங்கல் சூளை, டெக்ஸ்டைல், பேக்கரி கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றில் வேலை பார்க்கின்றனர். அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றினால்தான் அதிகளவில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வர். பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழல் காரணமாகவே வேலைக்கு செல்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிக கிராமப்புறங்களை கொண்ட போதிய படிப்பறிவில்லாத, ஏழை எளிய மக்கள் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் மறைமுக வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தலைநகரான விழுப்புரத்திலேயே ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் பார்ட்டைம் வேலைகளில் ஈடுபடுத்தப்படுவ தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை தடுக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறையும் ஆய்வு நடத்துவதோடு சரி, மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், சின்னசேலம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளோடு இடம்பெயரும் பெற்றோர்கள் படிப்புகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு செங்கல் மரம்வெட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கும் பட்சத்தில் அதனை முற்றிலும் ஒழிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆண்டிலாவது விழுப்புரம் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பெற்றோரின் நிரந்தர வருமானத்துக்கான வேலைவாய்ப்பை அரசு வழங்கினால் அவர்களே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Related Stories: