×

நகை பறிப்பு ஆசாமிகளை பிடிக்க 10 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு '

புதுச்சேரி, ஜூன் 11: புதுச்சேரியில் அடுத்தடுத்து நகை வழிப்பறியில் ஈடுபட்டு பெண்களை கலக்கமடைய செய்து தப்பிய நகை பறிப்பு ஆசாமிகளை பிடிக்க 10 சிசிடிவி கேமராக்களை தனிப்படை ஆய்வு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
புதுவையில் 2 நாட்களுக்கு முன்பு கோரிமேடு, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதியில் அடுத்தடுத்து பெண்களிடம் ஹெல்மெட் அணிந்த கும்பல் துணிகரமாக நகை வழிப்பறியில் ஈடுபட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூச்சலிட்ட நிலையில் பொதுமக்கள் அங்கு திரண்டு வருவதற்குள் வழிப்பறி கொள்ளையர்கள் பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். ஒரேநாளில் அடுத்தடுத்து நடைபெற்ற நகை பறிப்பு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள், உடனடியாக ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினர். ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை வழிப்பறி ஆசாமிகள் சிக்கவில்லை. இருப்பினும் கடந்த 3 நாட்களாக போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். வழிப்பறி ஆசாமிகள் மீண்டும் நகை பறிப்பில் ஈடுபடலாம் என்பதால் மப்டி உடைகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதோடு முக்கிய பகுதிகளில் வாகன சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக வடக்கு காவல் சரக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் புதுச்சேரி, தமிழகத்தில் ஏற்கனவே நகை வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே நகை பறிப்பு சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த தனிப்படை, வழிப்பறி ஆசாமிகளை அடையாளம் கண்டுள்ளனர். போலீசில் சிக்கியுள்ள வீடியோ பதிவில் வழிப்பறி ஆசாமிகள் பைக்கில் திண்டிவனம் சாலையில் தப்பிச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. மூவரில் 2 பேரின் முகம் தெளிவாக காணப்படும் நிலையில், அதை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையில் தனிப்படை இறங்கியுள்ளது. இதனால் விரைவில் நகை வழிப்பறி ஆசாமிகள் போலீஸ் வசம் சிக்குவார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...