இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு கோடை விடுமுறை முடிந்து புதுவையில் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி, ஜூன் 11:   கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. கொடி தோரணங்கள் கட்டியும், இனிப்புகள் வழங்கியும் ஆசிரியர்களால் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், முதல்நாளிலே புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழகம், புதுவையில் ஏப்ரல் 10ம் தேதிக்குபின் கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் 3ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கோடை வெயில் காரணமாக ஜூன் 10ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். அதன்படி புதுச்சேரியில் அரசு, நிதியுதவி மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. கோடை விடுமுறை முடிந்து ஒன்றரை மாதங்களுக்கு பிறகு மாணவ- மாணவிகள் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்தனர். பள்ளி வந்த மாணவர்களுக்கு சில அரசு பள்ளிகளில் வாழை, தென்னை ஓலைகளால் தோரணம் கட்டியும், பலவண்ண பேப்பர்களின் கொடி தோரணங்களுடன் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. சில குழந்தைகள் பள்ளி செல்ல அடம்பிடித்த நிலையில், அவர்களை பெற்றோர்கள் தேற்றி பள்ளியில் விட்டுச் சென்றதையும் காணமுடிந்தது.முதல்நாளான நேற்று அரசு பள்ளிகள் வழக்கம்போல் முழுநேரம் செயல்பட்டன. அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு முதல்நாளிலே புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கின. மேலும் புதிய மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றன. கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நகர பகுதிகளில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிறிதுநேரம் பாதிக்கப்பட்டனர். அதேவேளையில் நேற்று அஷ்டமி என்பதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் நாளை (12ம்தேதி) முதல் பள்ளியை திறக்க முடிவு செய்துள்ளன. இதனிடையே காரைக்காலிலும் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அங்கு மாணவ- மாணவிகள் உற்சாகமாக

பள்ளிகளுக்கு சென்றனர்.
Advertising
Advertising

Related Stories: