×

கன்னியாகுமரி தொகுதியில் 59.83 சதவீத வாக்குகளை அள்ளிய காங்கிரஸ் பா.ஜ.வுக்கு 35.04 சதவீத வாக்குகளே கிடைத்தது

நாகர்கோவில், மே 25: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 59.83 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. பா.ஜ.வுக்கு 35.04 சதவீத வாக்குகளே கிடைத்தது. கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கோணம் பாலிடெக்னிக் மையத்தில் 23ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடந்தது. தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்த போதிலும் கன்னியாகுமரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதம் அடைந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்றது. இரவு 12 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டதாக கலெக்டர் அறிவித்தார். 6 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 19 மின்னணு இயந்திரங்கள் திறக்க முடியாமலும், வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாமலும் நிலைமை உருவானது. கடைசியில் அந்த மின்னணு இயந்திரங்களுக்கான விவி பேட் ரசீதுகள் எண்ணப்பட்டன. மொத்தம் 52 விவி பேட்களை எடுத்து அதில் உள்ள ரசீதுகளை எண்ணி சரிபார்க்க நடவடிக்கைகள் தொடங்கின. இதனால் நள்ளிரவு 1 மணிக்கு பின்னரும் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுக்கு அறிவிக்கபடாமல் தொடர்ந்தது.தொடர்ந்து நேற்று அதிகாலை 1.10 மணியளவில் 6 லட்சத்து 27 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே அறிவித்தார். பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 67 ஆயிரத்து 302 வாக்குகளை பெற்றிருந்தார். மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றிருந்தார். தொடர்ந்து 1.30 மணியளவில் வசந்தகுமார் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே சான்றிதழ் வழங்கினார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 59.83 சதவீத வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் மொத்த வாக்குகளில் 35.04 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு 1.63 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் லெட்சுமணன் 1.18 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். மக்கள் நீதி மய்யத்திற்கு 0.82 சதவீத ஓட்டுகள் கிடைத்திருந்தன.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தது. மொத்தம் 6131 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தன. இதில் 43 தபால் ஓட்டுகள் ஆகும். தபாலில் வாக்களித்தவர்களும் நோட்டாவை விரும்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் லெட்சுமணன் மொத்தம் 12 ஆயிரத்து 345 வாக்குகள் பெற்றிருந்தார். அதே வேளையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெயின்டீன் 17 ஆயிரத்து 69 வாக்குகளை பெற்றிருந்தார். இதில் 259 தபால் ஓட்டுகளும் கிடைத்திருந்தன. தபால் ஓட்டுகளில் முக்கிய வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வாக்குகள் இருவருக்கு கிடைத்திருந்தன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மூன்றாம் இடத்தை நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



Tags : Congress ,BJP ,Kanyakumari ,constituency ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...