×

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தில் வீழ்படைப்புழுக்களை கட்டுப்படுத்த தொழில்நுட்ப ஆலோசனை

திருச்சி, மே 25: மக்காச்சோளத்தில் வீழ்படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் ஆலோசனைகளை வேளாண் விஞ்ஞானிகள் திருச்சி மாவட்ட விவசாயிகளை நேரடியாக சந்தித்து கலந்துரையாடல் நடத்தி விளக்கினர்.  திருச்சி மாவட்டத்தில் 12,000 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் வீழ்படைப்புழு தாக்குதல் தென்பட்டதால், அதனை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர்.  இந்நிலையில் கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் பிரபாகரன், பூச்சியியல் துறை பேராசிரியர்கள் சாத்தையா, முத்துகிருஷ்ணன் ஆகிய விஞ்ஞானிகள் குழு மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) ராஜேஸ்வரன், வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) விநாயகமூர்த்தி ஆகியோர் புள்ளம்பாடி வட்டாரம் தாப்பாய் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டாரம், கரியமாணிக்கம் கிராமங்களில் விவசாயிகளுடன் கலந்துரையாடி தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினர்.  

 இதில் மக்காச்சோளம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் உடனடியாக கோடை உழவு செய்ய வேண்டும்.  அதன் மூலம் கூட்டுப்புழுக்கள் மேலாக வந்து பறவைகளுக்கு இரையாகி அழிக்கப்படும்.  மழை பெய்தவுடன் விதைப்புக்கு முன்னதாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு, உழவு செய்வதன் மூலம் வீழ்படைப்புழுக்களை கட்டுப்படுத்த முடியும்.  மக்காச்சோள விதைகளை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பவேரியா பேசியானா என்ற நுண்ணுயுரி பூச்சிக்கொல்லியை விதை நேர்த்தி செய்ய ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி அதன் பிறகு விதைக்க வேண்டும்.  வயலில் விதைகளை விதைக்கும் போது 45x20 செ.மீ. என்ற அளவில் இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.  ஒவ்வொரு 10 வரிசைக்கு பிறகு 75 செ.மீ இடைவெளி விட்டு, அடுத்த வரிசையில் விதைக்க வேண்டும்.  மக்காச்சோளம் விதைக்கும் வயல்களில் வரப்பு பயிராக தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள் ஆகிய பயிர்களை விதைப்பதன் மூலம் வீழ்படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.  விதைத்த 20 நாட்களில் வேளாண்துறை அலுவலர்களின் ஆலோசனை பெற்று மருந்து தெளிக்க வேண்டும்.  மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் கடைப்பிடித்தால் மட்டுமே வீழ்படைப்புழுக்களை கட்டுப்படுத்த முடியும் என வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளிடம் ஆலோசனை வழங்கினர்.


Tags : district ,Tiruchi ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்