×

சாட்சியாபுரம் சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் விபத்து அபாயம்

சிவகாசி, மே 25: சிவகாசி-சாட்சியாபுரம் சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.
சிவகாசி நகராட்சி எல்லையில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் சாட்சியாபுரம் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளது. சிவகாசி நகராட்சிக்கு இணையாக சாட்சியாபுரம் பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. சிவகாசி நகராட்சி அருகிலேயே அமைந்துள்ளதால் இஸ்ஐ மருத்துவமனை, தாலுகா ஆபீஸ், கோர்ட், கோட்டாச்சியர் அலுவலகம், பொதுப்பணி துறை அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் இப்பகுதியில் அதிகமாக குடியிருந்து வருகின்றனர்.

பொதுமக்கள் இங்கு பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். அலுவலகம் எதிரே சிவகாசி-திருவில்லிபுத்தூர் மெயின் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இங்கு போக்குவரத்து தடுப்புகள் எதுவும் இல்லாததால் சாலையில் திரும்பும் போது பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே ஆர்டிஓ அலுவலகம் எதிரே போக்குவரத்து தடுப்புகள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாட்சியாபுரம் பஸ்நிலைய பகுதியில் 50க்கும் மேற்பட்ட கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடி, ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு டூவீலர், கார்களில் வருவோர் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் திருவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுதவிர சாலையின் இருபுறங்களிலும் வியாபாரிகள் சிலர் பழக்கடை, நடைபாதை கடைகள் அமைத்துள்ளனர். இந்த ஆக்கிமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் பெயரளவுக்கு அகற்றியுள்ளனர். தற்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சாட்சியாபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் டூ வீலரில் செல்வோர், பாதசாரகிள் பலர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் தொடர்கிறது.

சாட்சியாபுரம் பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று செல்லும் இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பஸ்கள் சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இது போன்ற நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மினி பேருந்துகள் பஸ்நிறுத்தங்களில் நிற்காமல் விருப்பம்போல் சாலையில் ஆங்காங்கே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்களும் நடக்கின்றன.

அரசு துறை உயர் அதிகாரிகள் இந்த சாலை வழியாகத்தான் தினமும் அலுவலகம் சென்று வருகின்றனர். சாலையில் இரு புறங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்த போலீசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் போக்குவரத்து நெரிசலால் விபத்துக்கள் ஏற்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கிறது. சாட்சியாபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...