×

சாத்தூர் தொகுதியில் டெபாசிட் இழந்த அமமுக

சிவகாசி, மே 25: சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எதிர்கோட்டை சுப்பிரமணியன் உட்பட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ல் அதிமுக சார்பாக போட்டியிட்டு 4,400 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றிபெற்ற எதிர்கோட்டை சுப்பிரமணியன் மீண்டும் போட்டியிட்டார். கிராமம், கிராமமாக சென்று அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று வாக்கு சேகரித்தார். எதிர்கோட்டை சுப்பிரமணியனுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

மேலும் விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட அமமுகவின் பல்வேறு பொறுப்பாளர்கள் சாத்தூர் தொகுதியில் தங்கி வாக்கு சேகரித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது, அண்ணன் எடப்பாடியார் முதலமைச்சராகவே நான் போட்டியிடுகின்றேன் என்று எதிர்கோட்டை சுப்பிரமணியன் வாய் தவறலான உளறல் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பூத் ஏஜெண்ட் போடுவது முதல் ஓட்டிற்கு பணம் விநியோகம் வரை அமமுகவின் பிரச்சார வியூகம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியது. வாக்குப்பதிவு அன்று பல்வேறு இடங்களில் அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் அமமுகவினர் இருந்தனர். 40 ஆயிரம் வாக்குகள் அமமுக பிரித்துவிடும். திமுக எளிதாக வெற்றிபெறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனா்.

ஆனால் தேர்தல் எண்ணிக்கையில் முதல் ரவுண்டு ஆரம்பிக்கும்போதே அமமுகவினர் வெளியேறினர். ஒவ்வொறு ரவுண்டிலும் 500 முதல் 700 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தனர். கோதைநாச்சியாாபுரம் என்ற கிராமத்தின் பூத்தில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுக்கூட கிடைக்கவில்லை. வேட்பாளரின் சொந்த ஊரான எதிர்கோட்டையில் திமுகவும், அதிமுகவும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தன. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திலும் சாத்தூர் நகராட்சியிலும் அமமுகவிற்கு மிகவும் குறைந்த அளவு வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இறுதி சுற்றின் முடிவில் தபால் ஓட்டுகளை சேர்த்து அமமுக வேட்பாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் 12,511 வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்தார். இது அமமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : constituency ,Sattur ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...