×

கோட்டூர் திருமக்கோட்டையில் கஜா புயலால் சேதமடைந்த மயான கொட்டகையை சீரமைக்காத அவலம்

மன்னார்குடி, மே 25 : திருமக்கோட்டையில் கஜா புயல் காரணமாக சேதமடைந்த மயான கொட்டகையை சீரமைத்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி நள்ளிரவில் அடித்த கஜா புயல் மிகப் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. புயலின் கோரப் பிடியில் சிக்கி ஒன்றியம் முழுவதும் உள்ள 49 ஊராட்சிகளிலும் ஏராளமான அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. புயல் கடந்து 6 மாதங்கள் ஆகியும்  பல கட்டிடங்கள் இன்று வரை சீரமைக்கப்படவில்லை.அந்த வகையில் கோட்டூர் ஒன்றியம் திருமக் கோட்டையில் மெயின் ரோட்டில் உள்ள மயானக் கொட்டகை புயலின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அதன் சுற்றுச் சுவர் முழுவதும் இடிந்து சேதமடைந்தது. மேலும் மயான கொட்டகையின் முன் முகப்பில் உள்ள தகர செட் தூண்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது, மேலும் தற்போது கடும் கோடை காலம் என்பதால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மயான கொட்டகையின் அருகில் உள்ள குளத்தில் தண்ணீர் இல்லை. இதனால் மயான கொட்டகையில் ஈமச்சடங்குகள் செய்வதற்கு வெகு தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை உள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் இறந்தவர்களின் உடலை மயான கொட்டகைக்கு கொண்டு வரும் போது ஈமச் சடங்கு செய்வதற்கு தண்ணீர் இல்லாமல் அவுதியடைந்து வருகின்றனர். மேலும் மயானக் கொட்டகை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் இறந்தவர்களின் உடலை அங்கு கொண்டு செல்ல முடியாமல் வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் அவலம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கஜா புயலால் சேதமடைந்த திருமக்கோட்டை மயான கொட்டகையை நேரில் சென்று பார்வையிட்டு சீரமைத்து தருவதோடு அந்த பகுதியில் ஒரு கைப்பம்பு அமைத்து தருமாறும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : storm ,Ghaja ,Kodur Thirumalakottai ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...