×

தஞ்சை அருகே பாதையில் கோளாறு திருவாரூர் மாவட்டத்தில் கடும் மின் தட்டுப்பாடு

திருவாரூர், மே 25: திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் இருந்து வருகிறது. இந்த மின் நிலையம் மூலம் திருவாரூர், கொரடாச்சேரி, குடவாசல், நீடாமங்கலம், நன்னிலம், பேரளம், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி மற்றும் கீழ்வேளூர், நாகை காரைக்கால் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் மின் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த துணை மின் நிலையத்திற்கு நெய்வேலி, தூத்துக்குடி, காரைக்குடி போன்ற மின் பாதைகளிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில்  தூத்துக்குடி மற்றும் நெய்வேலி பாதையிலிருந்து திருச்சி மற்றும்  தஞ்சை வழியாக திருவாரூர் வரும் மின் பாதையில் தஞ்சை அருகே அழுந்தூர் என்ற இடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மின்வினியோகம் சரிவர இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் நிறுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் மாற்றி மாற்றி வழங்கும் பணி நடைபெற்று வருவதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  

இதுகுறித்து திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரிடம் கேட்டபோது, தூத்துக்குடி மற்றும் நெய்வேலி பாதைகளில் இருந்து திருச்சி, தஞ்சை வழியாக வரும் மின்பாதையில் தஞ்சை அருகே ஏற்பட்ட பழுது காரணமாக மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடியிலிருந்து வரும் மின்சாரத்தை மட்டுமே  கொண்டு திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட மக்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றி மாற்றி மின் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த மின்பாதையில் தேவைக்கு அதிகமாக மின்சாரம் எடுக்கப்படும் பட்சத்தில் இந்த மின்பாதையும் முற்றிலுமாக பழுது ஏற்படும் என்பதால் மின்சாரம் மாற்றி மாற்றி வழங்கப்படுகிறது. மேலும் பழுது ஏற்பட்ட இடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று (நேற்று முன்தினம்) இரவு முதல் வேலை பார்த்து வருகின்றனர். இன்று இரவுக்குள் பணி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மின்விநியோகம் சரியாகும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvarur district ,Tanjore ,
× RELATED நீடாமங்கலம் வேளாண் அறிவியல்...