×

கற்பகநாதர்குளம் வளவனாற்றில் பழைய இடத்திலேயே புதிய பாலம் கட்ட வேண்டும்

முத்துப்பேட்டை, மே 25: முத்துப்பேட்டை அருகே வளவனாற்றில் முன்பு இருந்த இடத்திலேயே புதிய பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் வளவனாற்றில் பழமையான பாலம் இருந்து வந்தது. பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் வாய்மேடு, வேதாரண்யம் போன்ற பகுதிகளுக்கும், அதேபோல் அப்பகுதியை சேர்ந்தவர்கள் முத்துப்பேட்டை, இடும்பாவனம், தொண்டியக்காடு, தில்லைவிளாகம் போன்ற பகுதிகளுக்கும் செல்ல முக்கிய பாலமாக இருந்து வந்ததுடன் இப்பகுதியை சுற்றியுள்ள மாணவ, மாணவிகளும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இவ்வழியாக சென்று வருகின்றனர்.இந்நிலையில் பழமையான இந்த பாலத்தில் தாங்கு பில்லர்கள், கைப்பிடி சுவர்கள் முற்றிலும் சேதமாகி பல பகுதிகள் ஒவ்வொன்றாக இடிந்து விழுந்து வந்தது. மேலும் தரை சிலாப் பகுதிகளும் விரிசல் ஏற்பட்டு குறிப்பாக இந்த பழமையான பாலம் எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன் அவை பல கிலோமீட்டர் தூரம் சென்று மாற்று வழியில் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. மேலும்  பைக் மற்றும் சைக்கிள்களில் செல்பவர்கள் கூட இப்பாலத்தில் ஏறி செல்ல அஞ்சி திக் திக் என்ற மனதுடன் நடந்து தள்ளியவாறு சென்றது மிகவும் வேதனையாக இருந்தது. அதனால் இந்த பொலிவு இழந்த இந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தமிழக அரசும், பொதுப்பணித்துறை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்த பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு ரூ. 4 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய பாலம் அமைய உத்தரவிட்டு  அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியது.

ஆனால் இதுவரை  பணியை யாரும் தொடங்கவில்லை. அதனால் அந்த நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை என்றும், பழுதடைந்த பாலத்தை இடித்து அகற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து பழுதடைந்த பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் பாலம் கட்டுவதில் நீண்ட இழுபறி நீடித்தது. ஆனால் பம்பு செட்டுக்கு என அதன் அருகில் குழாய் செல்லும் வகையில் சிறியளவிலான பாலம் மட்டும் வளவனாறு குறுக்கே கட்டப்பட்டது. அந்த நேரத்தில் இந்த பாலத்தின் கட்டுமான பணியை கண்டு போக்குவரத்து பாலம் தான் கட்டப்பட்டு வருவதாக மக்கள் நினைத்து இருந்தனர்.பின்னர் நாளடைவில்தான் பம்பு செட்டு பாலம் என்பதை உணர்ந்து ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபடி விரைவில் பாலம் கட்டவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வந்தது. இதுகுறித்தும் தினகரனில் செய்தி வெளியானது. இந்தநிலையில் முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.4 கோடி நிதி வேறு ஒரு பணிக்கு செலவிடப்பட்டதாகவும், இந்த போக்குவரத்து பாலத்துக்கு என புதிதாக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு விரைவில் பாலம் கட்டுமான பணி துவங்க உள்ளதாகவும் வாய்மொழியாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இந்த வளவனாற்றில் குறுக்கே பாலம் கட்ட பழைய பாலம் இருந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பகுதியில் மண் ஆய்வு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் இந்த இடத்தில் தான் பாலம் கட்டபோவதகவும் பொதுப்பணித்துறையினரால் கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பழைய பாலம் இருந்த இடத்தில் புதிய பாலம் கட்டினால் பழையபடி தெற்கு பண்ணைத்தெருவிலிருந்து பாலத்தை நேர்ப்படுத்தி கட்டுவதன் மூலம் சீரான போக்குவரத்துக்கும் பல்வேறு வகையில் சிரமம் இல்லாமல் இருக்கும்.

இதன் மூலம் மக்களுக்கு  அதிகளவில் பயனாக இருக்கும். தற்போது சுமார் 300 மீட்டருக்கு அப்பால் கட்டுவதன் மூலம் புதிதாக மூன்று  வளைவுகள் ஏற்பட்டு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு வகையில் பாதிப்புகள் ஏற்படும். எனவே பாலத்தை இடம் மாற்றி கட்டும் எண்ணத்தை கைவிடவேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதில் மாற்றம் இல்லாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடவும் மக்கள் தயாராகி வருகின்றனர். இது குறித்து கற்பகநாதர்குளம்  விவசாயி சாமித்துரை கூறுகையில், பழுதடைந்த நிலையில் உள்ள இந்த பாலத்துக்கு மாற்றாக ரூ.4 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய பாலம் அமைய அப்ேபாது முதல்வராக இருந்த ஜெயலலிதா அனுமதித்துள்ளதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் தகவல் வெளியாகியது.  அந்தநிதி என்ன ஆனது? என்று மர்மமாக உள்ளது. இடிந்து விழும் நிலையில் இருந்த பழமையான பாலத்தை இடிக்க இப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டம் நடத்தினர். தற்போது முன்பு ஒதுக்கீடு செய்த பணம் திரும்ப சென்று விட்டதாகவும், தற்போது பாலம் கட்ட 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி புதிய பாலம் கட்ட 300 மீட்டர் தூரத்தில் உள்ள  வேறு பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் போக்குவரத்தில் குளறுபடி ஏற்படும். இதனை கண்டிக்கிறோம். இந்த பழைய பாலம் இருந்த இடத்தில் கட்டினால் மட்டுமே மக்களுக்கு பயனை தரும். எனவே பொதுப்பணித்துறை இந்த எண்ணத்தை கைவிட்டு பழைய பாலம் இருந்த இதில் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பெரியளவில் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags : bridge ,place ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...