×

நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்னை தீர விருதுநகர் கௌசிகா ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் நகர் மக்கள் கோரிக்கை

விருதுநகர், மே 25: விருதுநகர் வழி செல்லும் கௌசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணைகள் கட்டினால் நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டுமென நகர்மக்கள் தெரிவிக்கின்றனர். விருதுநகரை ஒட்டி உள்ள மதுரை மாவட்ட தரிசு காட்டுப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடமலைக்குறிச்சி கண்மாய் நிறைந்து கௌசிகா ஆறாக உருவெடுக்கிறது.

கௌசிகா ஆறு விருதுநகரின் மேற்கு பகுதி வழியாக ஒடி குல்லூர் சந்தை அணைக்கு செல்கிறது. அங்கிருந்து கோல்வார்பட்டி அணைக்கு செல்கிறது. கடந்த காலங்களில் மழை பெய்தால் பெருக்கெடுத்து ஓடும் கௌசிகா ஆறு தற்போது ஆக்கிரமிப்புகளால் மழை பெய்தாலும் தண்ணீர் வருவதில்லை.
விருதுநகரில் பாதளாச்சாக்கடை அமைந்தால் கௌசிகா ஆற்றில் சாக்கடை கலக்காது என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 13 ஆண்டுகளாக பாதளாச் சாக்கடை திட்டம் நிறைவடையாத நிலையில் நகரின் கழிவுநீர் செல்லும் ஓடையாக மாறி உள்ளது. கடந்த 2016ல் கௌசிகா ஆற்றை தூர்வாரி ஆழப்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.3 கோடியை தூர்வாராமல் கரையை மட்டும் உயர்த்தி பணத்தை எடுத்து மோசம் செய்ததால் தற்போது கௌசிகா ஆறு முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து முட்புதராக காட்சி தருகிறது. பொதுப்பணித்துறையினர் கௌசிகா ஆற்றிற்கான நீர்வரத்தை உறுதி செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஆற்றின் உள்பகுதியை தூர்வாரி மண் அகற்ற வேண்டும். விருதுநகர் நகராட்சி, சிவஞானபுரம், ரோசல்பட்டி, கூரைக்குண்டு ஊராட்சி பகுதிகளின் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். கௌசிகா ஆற்றின் உட்பகுதியில் இரு இடங்களில் தடுப்பணைகள் கட்டினால் நகரின் நிலத்தடி நீர்மட்டம் உயரும், மழைக்காலங்களில் மழைநீர் வீணாவது தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Nagarjuna ,river ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை