×

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சைக்காக நோயாளிகள் அலைக்கழிப்பு

அருப்புக்கோட்டை, மே 25: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்படுவதால் நோயாளிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை தேசிய தரச்சான்று பெற்ற மருத்துவமனை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு துவக்கப்பட்டு 2 டயாலிஸிஸ் மிஷின் கொண்டுவரப்பட்டது. இந்த டயாலிஸிஸ் மிஷினுடன் சேர்த்து ஆர்.ஓ எனப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு மிஷின் இயக்கப்படும்.

ஒரு நோயாளிக்கு 4 மணிநேரம் டயாலிஸிஸ் செய்யப்படும். தற்போது ஆர்ஓ மிஷினில் மெமரான் (பில்டர்) எனப்படும் சுத்திகரிப்பு பொருள் பழுதடைந்ததால் டயாலிஸிஸ் செய்யும் நேரம் அதிகமாகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 2 நோயாளிகளுக்கு மட்டுமே டயாலிஸிஸ் செய்யும் சூழ்நிலை உள்ளது. ஆர்ஓ பழுதால்  ஒரு நோயாளிக்கு 4 மணி நேரம் டயாலிஸிஸ் செய்ய வேண்டியது கூடுதலாக ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து விடத்தக்குளத்தை சேர்ந்த லோகநாதன் கூறுகையில், ‘சில நாட்களுக்கு முன்பு எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் சிறுநீரக செயல் இழப்பால் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் செய்வதற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஆர்ஓ மிஷின் பழுது என கூறி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மிஷின் ரிப்பேராக இருப்பதாக எழுதி வாங்கி வாருங்கள்.

அப்போது தான் இங்கு டயாலிஸிஸ் செய்ய முடியும் என திருப்பி அனுப்பினர். அந்த நபர் அங்கும் இங்குமாக அழைந்து தற்போது சாத்தூர் அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பெற்று வருகிறார். இதனால் அவருக்கு கால விரயமும், மன உலைச்சலும் ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலேயே டயாலிஸிஸ் செய்ய அனுமதித்தால் அவருக்கு மிகவும் வசதியாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பழுதான ஆர்ஓ மிஷினில் உள்ள மெமரானை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதலாக இரண்டு டயாலிஸிஸ் மிஷின்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Aruppukottai Government Hospital ,
× RELATED சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்