விவசாயிகளுக்கு அழைப்பு உளுந்து பயிரில் மஞ்சள் தேமல், இலை பரப்பு நெளிவு நோய் தாக்கம்

கும்பகோணம், மே 25: உளுந்து பயிரில் மஞ்சள் தேமல், இலை பரப்பு நெளிவு நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்தில் மஞ்சள் தேமல் மற்றும் இலை பரப்பு நெளிவு நோய்கள் காணப்படுகின்றன. இந்த நோய்களை வெள்ளை ஈ என்ற பூச்சி பரப்புகிறது. குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இலையில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, சுருங்கி வளர்ச்சிக்குன்றி காணப்படும். இதன் தாக்குதலால் 30 முதல் 70 சதம் மகசூல் இழப்பு உண்டாவதாக கணக்கிடப்பட்டுள்ளது.மேலும் அசுவினி உள்ளிட்ட சாறு உறிஞ்சும் பூச்சிகளும் உளுந்தை தாக்கி மகசூல் இழப்பிற்கு காரணமாக அமையும். இவற்றை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளை 45 நாட்கள் வரை பிடுங்கி அழிக்க வேண்டும். மஞ்சள் நிற ஒட்டுப்பொறி ஏக்கருக்கு 5 வைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.வேம்பு சார்ந்த அசடிராக்டின் 0.03 சத பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையை தாண்டினால் ஒரு ஏக்கருக்கு தயாமீத்தாக்சாம் 25 டபிள்யூஜி.50 கிராம், இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல் - 50 மி.லி., டைமீத்தோயேட் 30 ஈ.சி - 300 மி.லி, இவற்றுள் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்க வேண்டும்.

பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணங்களில் காய்புழுவின் தாக்குதல் காணப்படும். இதை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 2 சதவீதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மி.லி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளான இன்டாக்ஸா கார்ப் 15.8 எஸ்.ஜி - 130 மி.லி., குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி. - 60 மி.லி., இமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி - 90 கிராம் இவற்றுள் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பல்ஸ் ஒண்டர் எனப்படும் பயறு அதிசயம் என்ற ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கொண்ட பூஸ்டரை பூக்கள் பூக்க ஆரம்பிக்கும் தருணத்தில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிப்பதால் பூக்கள் கொட்டாமல் காய்கள் அதிகமாகவும், திரட்சியாகவும் இருப்பதால் பயிறுவகை பயிர்களின் மகசூலை 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்க முடியும். மேலும் வறட்சியை தாங்கும் திறனை பயிர்களுக்கு அளிக்கவல்லது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: