×

அண்ணாசிலைக்கு மாலை பெரியகுளம் சென்டிமென்டை உடைத்தெறிந்த திமுக

தேனி, மே 25:  பெரியகுளம் நகர் பழைய பஸ் நிலையத்தில் பிரமாண்டமான அண்ணா சிலை உள்ளது. இந்த சிலையை திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார். கடந்த 30 ஆண்டுகளில் தேர்தல் சமயத்தின்போது, வேட்பாளராக போட்டியிடுபவர் தேர்தலுக்கு முன்பாக இச்சிலைக்கு மாலையணிவித்தால் தோற்றுவிடுவோம் என்ற கற்பனையான தோற்றத்தை உருவாக்கி வைத்தனர். இதனால் பெரியகுளத்தில் பிறந்து வளர்ந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட யாரும் தேர்தலில் போட்டியிடும்போது இச்சிலைக்கு மாலையணிவிப்பதை தவிர்த்து, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே அண்ணா சிலைக்கு மாலையணிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இத்தகைய கற்பனையான களங்கத்தை துடைக்கும் வகையில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணக்குமார் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாக பெரியகுளத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் சென்று மாலையணிவித்து மரியாதை செலுத்தி பிரசாரத்தை துவக்கினார். ஆனால் இந்த தேர்தலில் திராவிடக்கட்சிகள் எனச் சொல்லிக்கொண்டு களத்தில் இறங்கிய அதிமுக  வேட்பாளர்களோ, அமமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ வேட்பாளர்களோ அண்ணா சிலைக்கு மாலையணிவிக்கவில்லை. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் அண்ணா சிலைக்கு மாலையணிவித்தால் வேட்பாளர் தோற்பார் என்ற மாய கற்பனை களங்கத்தை துடைக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளார்.

Tags : DMK ,Periyakulam ,Annasillai ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்