×

உத்தமபாளையத்தில் மண் ஆய்வு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

உத்தமபாளையம், மே 25: உத்தமபாளையம் வட்டாரத்தில் ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் உள்ள மண்வளம் பற்றி ஆய்வு செய்து கொள்ளலாம் என உத்தமபாளையம் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ராமராஜ் கூறி உள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், உத்தமபாளையம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் தேசிய மண்வள இயக்க திட்டத்தின்கீழ் மண் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து மண் மாதிரிகள் பெறப்பட்டு இலவசமாக மண் ஆய்வு செய்யப்பட்டு மண் மாதிரி முடிவுகள் மண்வள அட்டைகளாக வழங்கப்பட உள்ளது.
 
உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மண்மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மண் பரிசோதனை செய்வதால் மண்ணில் உள்ள சத்துக்கள் கண்டறியப்பட்டு தேவைக்கு ஏற்ப உரமிட முடியும். தேவையற்ற சத்துக்கள் அதிகமாக இடுவதால் பிறசத்துக்களை பயிர் எடுக்க முடியாத நிலை உண்டாகும். இதனால் உரச்செலவும் கூடும். மண் ஆய்வுப்படி உரமிடுவதால் உரசெலவு குறைவதுடன், மகசூல்  அதிகரிக்கும். மண் ஆய்வில் நுண்ணூட்ட சத்துக்களின் நிலை பற்றியும் ஆய்வு செய்து பரிந்துரை செய்யப்படுகிறது. இதனால் நுண்ணூட்டங்களின் பற்றாக்குறை அறிந்து உரமிடுவதால் பயிரின் வளர்ச்சி அதிகரிக்கும். களர், உவர், நிலங்களின் தன்மை ஆய்வு செய்யப்பட்டு அவற்றை சீர்திருத்த ஜிப்சம் போன்ற மண்வள உரங்கள் எவ்வளவு இட வேண்டும். எனவே மண் பரிசோதனை மிகவும் அவசியம் என்று கூறினார்.

மானியத்தில் பயறு

இதுகுறித்து அவர் கூறுகையில், உத்தமபாளையம் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்க மையத்தில் கோடைகால விவசாயத்திற்கு தேவையான உழுந்து, பாசிப்பயறு மற்றும் நிலக்கடலை விதைகள் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் 1 கிலோ ரூ.40 வீதம் மானியம் இனத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்கள் பயன்பெறலாம். உத்தமபாளையம் வட்டார விரிவாக்க மையத்தில் குறுவைக்கு தேவையான நெல்விதைகள், என்எல்ஆர் 34449, டிகேஎம் 13, கோ 51 உள்ளிட்ட விதைகள் கிலோவிற்கு ரூ.20 மானியத்தில் விதை நெல்கள் தயார் நிலையில் உள்ளது. இதனை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என்றார்.

Tags : Uthamapalayam ,
× RELATED பெண் தற்கொலை