×

தலைஞாயிறு பேரூராட்சியில் ரூ.10 கோடியில் வண்டல் சாலை சீரமைப்பு, தடுப்புசுவர் பணி மும்முரம் மழைக்காலத்திற்குள் முடிக்க திட்டம்

வேதாரண்யம், மே 25: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் வலம்புரி வண்டல் சாலை பணிகள் ரூ.10 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. வருகிற மழை காலத்திற்குள் இப்பணிகள் முடிவடையும் என பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு வண்டல் குண்டூரான் வழி ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மழை நீர் மற்றும் ஆற்று நீரால் சூழப்பட்டு தனி தீவுபோல ஆகிவிடும்.  மழை காலங்களில் இப்பகுதி மக்கள் வண்டலிலிருந்து தலைஞாயிறுக்கு படகு மூலமே வந்து செல்வார்கள். மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலங்களில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பள்ளி மாணவ, மாணவிகளும் படகிலேயே பள்ளிக்கு வந்து செல்வார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் ஓ.எஸ் மணியனிடம் சாலையை உயர்த்தி போட்டு தருமாறு  கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் அரசுக்கு பரிந்துரை செய்து ரூபாய் பத்துகோடி நிதிபெற்று தலைஞாயிறு பேரூராட்சி  மூலம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.6 கோடி செலவில் தடுப்புச்சுவர் அமைத்தும், சாலையை உயர்த்தியும் தண்ணீர் வடிவதற்கு சிறிய பாலங்கள் அமைக்கும் பணியும் நடைப்பெற்று வருகிறது.  

இதேபோல் பழையாற்றாங்கரையில்  ரூ.3 கோடி செலவில் சாலையை தரம் உயர்த்தியும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  வேளாங்கண்ணி மொந்தலில் ஒருகோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தி தார் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிகள் அனைத்தும் வரும் மழைகாலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின்  பயன்பாட்டிற்கு விடப்படும் என தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தெரிவித்தார்.


Tags : Thanjavur Panchayat ,
× RELATED அடிப்படை வசதி கோரி கரம்பை பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு