×

பலமாதமாக கிடப்பில் போடப்பட்ட புதிய கடற்கரை சாலைப்பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகை, மே 25: நாகையில் பல மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய கடற்கரை சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.நாகை புதிய கடற்கரை சாலையில் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திட்ட இயக்குநர், எஸ்பி, கலெக்டர் ஆகியோரின் முகாம் அலுவலகம், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் வந்தால் தங்கும் பயணிகள் தங்கும் விடுதியான தமிழக அரசின் சுற்றுலா மாளிகை உள்ளிட்டவை உள்ளது. இந்த சாலை வழியாக காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கரம் வாயிலாக ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் புதிய கடற்கரைக்கு செல்கின்றனர்.அதேபோல் வீட்டுவசதி வாரிய குடியிப்பும் இந்த பகுதியில் தான் உள்ளது. இவ்வாறு மிகவும் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் இந்த சாலை பாதியில் போட்டும், பாதியில் போடாமலும் விட்டு வைத்துள்ளனர். குறிப்பாக நாகை ஏழைபிள்ளையார் கோயில் பகுதியிலிருந்து நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சாலை போடாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள சாலை மிகவும் குண்டும், குழியுமாகவே உள்ளது. இரவு நேரங்களில் இவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வருவோர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர். சாலையை சீர் செய்ய வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. இந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என்று நாகை நகராட்சி நிர்வகமோ அல்லது நெடுஞ்சாலைதுறையோ முன்வருவது இல்லை.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்பொழுது கவர்னர் விழாவில் கலந்து கொண்டு சுற்றுலா மாளிகையில் தங்குவதற்காக சென்றார். இதற்காக மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்து நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை பளபளப்பாக சாலையை போட்டனர்.நாகை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து புதிய கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எல்லோரும் ஏழைபிள்ளையார் கோயில் பகுதி சாலையை தான் அதிக அளவில் பயன்படுத்துவார்கள். அப்படி இருந்தும் இந்த சாலையை போடாமல் அப்படியே வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த சாலை குண்டும், குழியுமாக மாறி மிகவும் மோசமடைந்துள்ளது. கோடை காலத்திலேயே சாலையை சீர் செய்துவிட்டால் நல்லது. அதை விட்டு அப்படியே கிடப்பில் போட்டால் மழை காலம் தொடங்கியவுடன் சாலையின் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இன்னும் மோசமாகி விடும். அப்படி மோசமானால் இந்த சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவது மிகவும் கஷ்டமாகிவிடும். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் பழுதடைந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : road worker ,
× RELATED இறந்த சாலை பணியாளர் வாரிசுகளுக்கு...