×

தேசிய நெடுஞ்சாலை வழியாக மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு

க.பரமத்தி, மே25: தேசிய நெடுஞ்சாலை வழியே மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்துக்குள்ளாகின்றனர்.க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரம், காருடையம்பாளையம், நெடுங்கூர், க.பரமத்தி, முன்னூர் தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு தென்னிலை தெற்கு, மொஞ்சனூர், கோடந்தூர், ஆகிய ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்கள் சில ஊர்கள் கரூர் கோவை செல்லும் தேசிய நெடுஞ் சாலையையொட்டியே அமைந்துள்ளது. இப்பகுதிகளில் போதிய மழை இல்லாத நிலையில் விவசாயிகள் பலர் கால்நடைகள் வளர்ப்பதையே தொழிலாக செய்து வருகின்றனர். சிலர் இறைச்சிக்காக கால்நடைகளை வளர்த்து செவ்வாய் தோறும் கூடும் வார சந்தையில் விற்பனை செய்கின்றனர். கால்நடைகளை மொத்தமாக தரிசு நிலங்களில் மேய்ச்சலுக்கு விட்டு மாலை நேரங்களில் திரும்ப வீட்டுக்கு கொண்டு வருவதற்கென ஒரு சிலர் கூலி ஆட்கள் வைத்தும் ஒரு சிலர் தானே அந்த பணிகளை செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் மேய்ச்சலுக்காக நீண்ட தூரம் கொண்டு செல்லும் சிலர் கால்நடைகளை கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டிச்செல்வதால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கார் வேன், பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் போன்ற
வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். வாகனப்போக்குவரத்து அதிகம் உள்ள இந்த நேரத்தில், சாலைகளில் கூட்டமாகச் செல்லும் கால்நடைகளால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் கால்நடைகளை தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டிச்செல்வதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாய் உள்ளதாக பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : highway ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...