×

க.பரமத்தி பகுதியில் வெயிலின் தாக்கத்தால் அனல்காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதி

க.பரமத்தி, மே25: க.பரமத்தி பகுதியில் வெயிலின் தாக்கத்தோடு அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக அக்னி வெயிலின் தாக்கம் மட்டும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது அக்னி வெயிலின் தாக்குதலோடு மதிய வேளைகளில் வெப்பக்காற்றும் சேர்ந்து வீசி மேலும் சொல்லொன்னா துயரை ஏற்படுத்தி வருகிறது.இதனால் தேசிய நெடுஞ்சாலையில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் உடல் வறட்சி நிலைக்கு தள்ளப்படுகிறது. க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் போதிய பருவ மழையும் இல்லாத நிலையில் விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கிறது. அதில் முளைத்துள்ள புற்கள் வறட்சியில் கருகி வருகிறது. இந்நிலையில், இரை தேடும் கால்நடைகளும் நண்பகல் வெயிலில் காய்ந்த புற்களை வேறு வழியில்லாமல் உண்ணும் அவலமும் ஏற்பட்டுள்ளது. நீர் ஆதாரங்கள் வற்றிவிட்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் முதல் நீரின் பயன்பாடு பெரும் பிரச்னையாக உள்ளது.

இந்நிலையில் அவ்வப்போது ஏற்படும் மின் தடையும் சேர்ந்து கொள்வதால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடியிருப்புகள் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் நிழல் தரும் மரங்களை வெட்டிவிட்டதால், வெப்பத்தின் தாக்கத்தை பொதுமக்களால், சமாளிக்க முடியவில்லை.காலநிலை மாற்றத்தால், அதிகரிக்கும் வெப்பத்தை குறைக்க ஒரே தீர்வு வீட்டுக்கு ஒரு மரம், தோட்டம் வளர்க்க வேண்டும். இதற்கு தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் முன் வரவேண்டும். வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தால் அடுத்து வரும் காலங்களிலாவது கோடை வெப்பம் குறைய வாய்ப்பாக அமையும் என்பது சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : area ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...