×

ரமலான் நோன்பை முன்னி்ட்டு அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதியில் பேரிச்சம்பழம் விற்பனை அதிகரிப்பு

அரவக்குறிச்சி. மே 25 : அரவக்குறிச்சி, பள்ளபட்டி உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் ரமலான் நோன்பை முன்னிட்டு பேரிச்சம்பழம் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.இஸ்லாமியர்களின் ஜம்பெரும் கடைமைகளில் ஒன்று நோன்பு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ஷாபான் மாதம் கடைசி நாள் மாலை வானத்தில் பிறை பார்ப்பார்கள். பிறை தெரிந்ததும் ரமலான் முதல் நாள் அதிகாலை முதல் மாலை சூரியன் மறையும் வரை பசித்திருந்து ஒவ்வொரு நாளும் விரதம் என்னும் நோன்பு இருப்பார்கள். இந்த நோன்பு கடைபிடித்தல் 30 நாட்கள் நடைபெறும். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் சகர் செய்தல் என்னும் நோன்புக்காக உணவு உண்ணுதலுடன் ரமலான் நோன்பு ஆரம்பமாகும்.

மாலை சூரியன் மறைந்ததும் நோன்பு திறப்பார்கள். இதில் ஒவ்வொரு நாளும் மாலை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முக்கியமானதாகத் திகழும். நோன்பு திறக்கும் போது அவரவர் வசதிக்கேற்ப ஆரஞ்சு, ஆப்பிள் ஜுஸ் வகைகள் நோன்புக் கஞ்சி என உணவுகள் உண்டாலும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலின்படி நோன்பு திறப்பதற்காக முதலில் உண்பது பேரிச்சம் பழமாகத்தான் இருக்கும். அரவக்குறிச்சி மற்றும் பள்ளபட்டியில் உள்ளிட்ட பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் நோன்பு திறப்பதற்காக அதிக அளவில் பேரிச்சம் பழம் வாங்குவார்கள். இதனால் அரவக்குறிச்சி பள்ளபட்டி ஈசநத்தம்உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வழக்கமாக பேரிச்சம் பழம் விற்கும் மளிகை கடைகள் அல்லாமல் ரமலான் நோன்பு காரணமாக ஏறத்தாழ அனைத்துக் கடைகளிலும் பல்வேறு வகையான பேரிச்சம் பழங்கள் பல அளவுகளில் பாக்கெட்டுகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேரிச்சை  வியாபாரி ஒருவர் கூறியதாவது, முஸ்லிம்கள் சாதாரனமாகவே பேரிச்சம் பழத்தை விரும்பி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.தற்பொழுது பேரிச்சம் பழத்தைக் கொண்டு ரமலான் நோன்பு திறப்பதால் சாதாரண நாட்களை விட ரமலான் நோன்பு காலங்களில் பேரிச்சம்பழம் பல மடங்கு அதிகமாக விற்பனையாகும். பேரிச்சம்பழத்தில் அஜ்வா, மஸ்கட் தமர், யாபிஸ், சவுதி எனபல ரகங்கள் உள்ளன. கிலோ ரூ 200 முதல் ரூ 1200 வரை ரகத்திற்கு தகுந்தாற்போல விற்பனைக்கு உள்ளது. இங்கு மஸ்கட், தமர் பழங்கள் ரூ 200 முதல் ரூ 300 வரை உள்ளதால் இந்த ரகம் இங்கு அதிக அளவில் விற்பனையாகும் என்றார். இதனால் அரவக்குறிச்சி, பள்ளபட்டி உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் ரமலான் நோன்பை முன்னிட்டு பேரிச்சம்பழம் விற்பனை பல மடங்கு  அதிகரித்துள்ளது.

Tags : sale ,area ,Vallapalli ,Atalakurichi ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...