×

விழுப்புரம் கோட்ட கழக அரசு பஸ்களில் நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூல்: பயணிகள் குமுறல்

திருவள்ளூர், மே 25: அரசு நிர்ணயித்ததை விட அரசு பஸ்களில் அதிக கட்டணமும், தனியார் பஸ்களில் குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் அரசு பஸ்களைப் புறக்கணித்து வருகின்றனர்.தமிழகத்தில், கடந்த திமுக ஆட்சியின்போது, பஸ் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை. அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கட்டணம் உயர்த்தாததைக் காரணம் காட்டி, அதிரடியாக பஸ் கட்டணத்தை உயர்த்துவதாக அதிமுக அரசு அறிவித்தது. அதையும் நியாயமென்றே பொதுமக்களும் ஏற்றுக் கொண்டனர். அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்களில் அரசு நிர்ணயித்ததை விட மறைமுகமாக கூடுதல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த விதிமீறலில், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக கோட்டம்.இந்த கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் மற்றும் ரூட் பஸ்கள் பெரும்பாலானவற்றில், அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுவதே இல்லை. முன் பக்க கண்ணாடியில் இருக்கும் பெயருக்கேற்ப, இஷ்டம் போல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உதாரணமாக,  திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ₹24. ஆனால் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. தனியார் பஸ்களில் இந்த அளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தனியார் பஸ்களைப் பொறுத்தவரை, எவ்வளவு புதிய பஸ்களாக இருந்தாலும், அதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கின்றனர். ஆனால், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ்கள், புதிதாக இருந்தாலும், பல இடங்களில் ‘’அடி வாங்கி’’  பழசாகி இருந்தாலும், அதற்கு ‘’சொகுசு பஸ்’’, எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டு கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில அரசு பஸ்களில் கட்டணம் அதிகமாகவும், தனியார் பஸ்களில் குறைவாகவும் இருப்பதால்தான், பெரும்பாலான மக்கள் அரசு பஸ்களைப் புறக்கணித்து, தனியார் பஸ்களை நாடிச் செல்கின்றனர்; அரசு போக்குவரத்துகழகங்கள், நஷ்டமாவதற்கு இதுவே முக்கியக் காரணம்.

இங்கே ‘’மறைமுகமாக’’ வசூலிக்கப்படும் கட்டணம் அளவுக்கு, வேறு எந்த மாநிலத்திலும் கட்டணம் வாங்க வாய்ப்பேயில்லை. தேர்தல் முடிவுக்குப் பின், மீண்டும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் உள்ளது; அப்போதாவது, இந்த ‘’மறைமுக’’’’ கட்டணங்கள் ஒழியுமா என்பதுதான் தெரியவில்லை.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நஷ்டம் ஆண்டிற்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே போகிறது. போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பல பஸ்கள் ஜப்தியில் உள்ளன.  ஆனாலும், ஆண்டுதோறும் பல ஆயிரம் புதிய பஸ்களை வாங்குவதில் தமிழக அரசு அக்கறை காட்டி வருகிறது.பஸ் வாங்குவதிலிருந்து உதிரி பாகங்கள் வாங்குவது வரை, எல்லாவற்றிலும் ‘’கமிஷன்’’ கலாச்சாரம் தலை விரித்தாடி வருகிறது. அது மட்டுமின்றி, ஒவ்வொரு போக்குவரத்துக் கழத்திலும் தேவையற்ற உயர் பணியிடங்களை உருவாக்கி, அவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளமும், வாகனம், டீசல், படித்தொகை என பணம் வாரி இறைக்கப்படுகிறது.ஒரு பஸ்சுக்கு 4 ஊழியர்களை மட்டுமே வைத்து இயக்கும் தனியார் பஸ் நிறுவனம், லாபத்தில் இயங்கும்போது, பல ஆயிரம் பஸ்களை இயக்கும் அரசு போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு லஞ்சம், ஊழல், கமிஷன் ஆகியவையே காரணம்.எனவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை பயணிகளிடம் பெற விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Villupuram Coimbatore Government ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...