பாதாள சாக்கடை அமைத்து பல மாதங்களாகியும் கிடப்பில் சாலை சீரமைப்பு பணிகள்: தாம்பரம் நகராட்சியில் அவலம்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சி 23வது வார்டில் பாதாள சாக்கடை பணி முடிந்து பல மாதங்களாகியும் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பல மாதங்களுக்கு முன், பாதாளசாக்கடை பணிகள் துவங்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பணிகள்  முடிவடைந்தது. ஆனால், இப்பணிக்காக உடைக்கப்பட்ட சாலையை இதுவரை அதிகாரிகள் சீரமைக்கவில்லை. மேலும், சாலையின் ஒருபுறம் புதிதாக மழைநீர் கால்வாய் கட்டி அதை அரைகுறையாக அப்படியே விட்டுவிட்டனர்.மற்றொரு புறம் கால்வாய் கட்டாமல் அப்படியே விட்டு விட்டு அதற்குள் சாலை அமைக்கப்போவதாக சாலைகளில் ஜல்லிகளை கொட்டி அதன் மேலே கிரஷர் மண்ணை கொட்டிவிட்டு அப்படியே விட்டு விட்டனர். கால்வாயை முழுமையாக  கட்டி முடித்து விட்டு பின்னர் சாலை அமைத்தால் தான் சரியாக இருக்கும். மாறாக, சாலையை அமைத்துவிட்டு பின்னர் கால்வாய் பணிகளை செய்தால், மீண்டும் சாலைக்கு பாதிப்பு ஏற்படும். இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி உதவி பொறியாளர் நளினியிடம் கூறினாலும் அவர் அதுகுறித்து கண்டுகொள்ளாமல்  இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இப்பகுதியில் பாதாள சாக்கடை பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. பின்னர் சில மாதம் அந்த பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்த செய்தி ‘‘தினகரன்’’ நாளிதழில் படத்துடன்  வெளிவந்தது. இதனால், மீண்டும் அந்த பணிகள் துவங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிக்கப்பட்டது. ஆனால் நகராட்சி அதிகாரிகள் இதுவரை சாலை பணிகளை மேற்ெகாள்ளவில்லை.  தெருக்களில் ஒருபுறம் மட்டும் கால்வாய் பணியை அரைகுறையாக செய்துவிட்டு, மறுபுறம் அப்படியே விட்டுவிட்டனர். கால்வாய் பணியை முழுமையாக முடிக்காமல் அதற்குள் சாலை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

கால்வாய் பணிகளை முழுமையாக முடிக்காமல் எப்படி சாலை அமைக்க முடியும் என தாம்பரம் நகராட்சி உதவி பொறியாளர் நளினியிடம் கேட்டால், சாலையை அமைத்து விட்டு பின்னர் நாங்கள் கால்வாயை அமைப்போம் என்று  அலட்சியமாக பதிலளிக்கின்றார்.

அதிகாரிகள் சொல்வதுபோல சாலையை அமைத்து பின்னர் கால்வாய் பணிகளை செய்தால் சாலைக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். சாலைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என கூறி மீண்டும் சாலையை அமைக்க முயற்சிப்பார்கள். இதனால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகும். அதுமட்டும் இன்றி சாலை அமைப்பதற்காக ஜல்லி மற்றும் கிரஷர் மண்ணை சாலை முழுவதும் கொட்டி வைத்துள்ளனர். இதனால், சாலை முழுவதும் மண் புழுதி சூழ்ந்து காணப்படுகிறது.  இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: