எழும்பூர் ரயில் நிலையம் அருகே 6 லட்சம் கஞ்சா பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்

சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் அருகே ₹6 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை போன்ற  தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதைப்போன்று, மின்சார ரயில்களும் இயக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு  ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் இந்த ரயில் நிலையம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று எழும்பூர் ரயில் நிலையம் அருகே 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி போலீசார் எழும்பூர் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக  பதில் அளித்துள்ளனர். அவர்களது பையை சோதனை செய்தபோது, அதில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹6 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த பால்பாண்டி (23) மற்றும் சேர்காளை (40) என்பதும், வெளி மாநிலத்தில் இருந்து  கஞ்சாவை கடத்தி வந்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்பவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: