பட்டாபிராமில் போலி தங்க காசுகளை விற்ற 2 பெண்கள் கைது

ஆவடி:  ஆவடி அருகே பட்டாபிராமில் இல்லத்தரசியை ஏமாற்றி போலி தங்கக்காசுகளை விற்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.    ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது மனைவி தீபா (27). நேற்று காலை தீபா, தனது அத்தை ராணியுடன் மருந்து வாங்க ஆவடிக்கு புறப்பட்டார். இருவரும் இந்துக் கல்லூரி ரயில்  நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவரையும் 2 பெண்கள் வழிமறித்து பேச்சு கொடுத்தனர். அவர்கள், தங்களிடம் நிறைய தங்க காசுகள் உள்ளன. எங்களுக்கு அவசரமாக ரூ.3 ஆயிரம் தேவை. ஆகவே  தங்க காசுகளை குறைந்த விலையில் விற்கிறோம். அதை  யோசிக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். உடனே அந்த தங்க காசுகளை கையில் வாங்கி தீபா பார்த்துள்ளார்.  அதன் மீது அவருக்கு சந்தேகம்  ஏற்பட்டது.

ஆனாலும், தனது கணவர் பிரவின்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.  உடனே அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அந்த பெண்களிடம் இருந்த தங்க காசுகளை வாங்கி போலியா அல்லது உண்மையானது தானா என்பதை உறுதி  செய்ய சோதித்து  பார்த்தார். அப்போது, அது போலி தங்க காசுகள் என கண்டறியப்பட்டது. உடனே அங்கிருந்து நைசாக நழுவ முயன்ற  இருவரையும் பிடித்து பட்டாபிராம் காவல்நிலையத்தில் அவர் ஒப்படைத்தார்.  இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், எஸ்.ஐ முல்லைவேந்தன் ஆகியோரின் தீவிர  விசாரணையில், திருச்சி, முத்தரசநல்லூர்,  கணபதி நகரைச் சேர்ந்த மகேஸ்வரி (23), மங்கம்மாள் (30) என்றும், அவர்கள் வைத்திருந்தது தங்க மூலாம் பூசிய இரும்பு காசு எனவும்  தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 போலி தங்க காசுகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும்,  இருவரும் வேறு ஏதாவது சம்பவங்களில் பொதுமக்களை ஏமாற்றி உள்ளனரா? இவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: