×

தரமணி மகாத்மா காந்தி நகரில் குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் பொதுமக்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வேளச்சேரி: சென்னை மாநகராட்சி 180வது வார்டுக்கு உட்பட்ட தரமணி மகாத்மா காந்தி நகர், பெரியார் நகர், பாரதி நகர், அண்ணாநகர், கலைஞர் நகர், கானகம் ஆகிய பகுதிகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.  இவர்களுக்கு நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் பொது குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் ஒருநாள் வீட்டு ஒருநாள் குடிநீர் வழங்கி வந்தனர். ஆனால் கடந்த 10 நாட்களாக இந்த பகுதி குழாய்களில் வழங்கப்படும் குடிநீரை நிறுத்திவிட்டு தினந்தோறும் லாரிகளில் வினியோகம் செய்கின்றனர். ஒரு தெருவுக்கு 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் ஒரு வீட்டிற்கு 5 குடம்  தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. எனவே இது போதுமானதாக இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் வசிக்கும் கணவன், மனைவிகள் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். குழந்தைகளும் பள்ளி கல்லூரிகளுக்கு  செல்லும் நிலையில் உள்ளனர். குடிநீர் வாரியம் சார்பில் ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு  தண்ணீர்  வினியோகம் செய்யப்படுகிறது. மதிய நேரத்தில் தெரு தெருவாக லாரிகளில் சப்ளை செய்வதால் வேலைக்கு செல்லும் பெரும்பாலானவர்களால் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் தினக்கூலியை நம்பி உள்ள இப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் ஒருநாள்  விட்டு ஒரு நாளைக்கு வீட்டு குழாய்களில் தண்ணீர் விட வேண்டும் என இப்பகுதி மக்கள் குடிநீர்  வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால், குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் லாரிகளில் குறைந்த அளவு தண்ணீர் வினியோகம் செய்கின்றனர். இதனால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரிவுப்படுத்தி மீண்டும் வீட்டு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதிய நேரத்தில் தெரு தெருவாக லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் வேலைக்கு செல்லும்  பெரும்பாலானவர்களால் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை உள்ளது.


Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...