மாவட்டம் முழுவதும் கடும் வறட்சியால் விவசாய பணிகள் பாதிப்பு

சேலம், மே 25: சேலம் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு, பயிர்கள் அனைத்தும் காய்ந்து கருகி வருகின்றன. இதில், இடைப்பாடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி பழங்கள், வெயிலின் தாக்கத்தால் தண்ணீரின்றி செடியிலேயே அழுகி வருவதால் விவசாயிகள் ேவதனை அடைந்துள்ளனர்.

 சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாததால், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. மேலும், கோடை வெயிலும் சுட்டெரிப்பதால் நீர்நிலைகள் வறண்டு, விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாழப்பாடி, ஆத்தூர், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னை, பாக்கு மரங்கள் தண்ணீரின்றி காய்ந்து பட்டுப்போய் விட்டன. கொளுத்தும் கோடை வெயிலுக்கு, கடும் வறட்சியையும் தாங்கி வளரும் பனைமரங்கள் கூட தப்பவில்லை.

இளம்பிள்ளை, இடைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர பனைமரங்கள் அடியோடு பட்டுப்போய் காணப்படுகின்றன. இந்நிலையில், இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, காசிக்காடு, ஓனாம்பாறை, கூடக்கல், குப்பனூர், மூலப்பாறை, நாவிதன்குட்டை, காட்டூர், நெடுஞ்குளம், பூமணியூர், கோனேரிப்பட்டி, தண்ணிதாசனூர் உள்ளிட்ட சுற்றுவட்ட வட்டார பகுதியில், 200க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் தர்பூசணி கடந்த 2மாதத்திற்கு முன் சாகுபடி செய்துள்ளனர். இவற்றை கிணற்று நீர் மற்றும் சொட்டுநீர் பாசனத்தில் பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது காய்பிடிப்பு தன்மை அதிகரித்து அறுவடைக்குக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் வெயின் தாக்கம் அதிகரித்தால், பறிக்கும் தருவாயில் இருந்த தர்பூசணி பழங்கள் வெம்பி செடியிலேயே அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 2மாதத்திற்கு முன், கோடை காலத்தை கருத்தில் கொண்டு, தர்பூசணி சாகுபடி செய்து பராமரித்து வந்தோம். காய்பிடிப்பு தன்மை அதிகரித்து வந்த நிலையில், தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டது.

இதனால், டேங்கர் லாரிகளில், ₹1500க்கு தண்ணீர் வாங்கி தோட்டத்திற்கு விட்டு வளர்த்து வந்தோம். அறுவடை ேநரத்தில், வெயிலின் தாக்கம் அதிகரித்தால், தர்பூசணி பழங்கள் அனைத்தும் செடியிலேயே பழுத்து அழுகி விட்டது. இதனால் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வருகிறோம். எனவே, தர்பூசணி சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை, வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க ேவண்டும்,’ என்றனர்.

Related Stories: