முதல்வரின் சொந்த தொகுதியான இடைப்பாடி உள்பட 6 சட்டசபை தொகுதிகளிலும் அதிமுகவை பின் தள்ளிய திமுக

சேலம், மே 25: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் முதல்வரின் சொந்த தொகுதியான இடைப்பாடி உள்பட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபனும், அதிமுக சார்பில் கே.ஆர்.எஸ்.சரவணனும் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில், அனைத்து சுற்றிலும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் முன்னிலை வகித்தார். இறுதியில் அவர், அதிமுக வேட்பாளர் சரவணனை விட 1,46,926 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சேலம் தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர், இடைப்பாடி, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் பார்த்திபன் அதிக வாக்குகள் பெற்றுள்ளார். குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்ற அவரது சொந்த தொகுதியான இடைப்பாடியில், அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் பார்த்திபன் 8,088 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். அந்த தொகுதியில் திமுக வேட்பாளருக்கு 1,04,573 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு 96,485 வாக்குகளும் கிடைத்துள்ளது.

இதேபோல், அதிமுகவின் கோட்டை என்று கட்சியினர் கூறி வந்த, சேலம் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபனுக்கு 87,863 வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு 65,740 வாக்குகளும் கிடைத்துள்ளது. இது அதிமுக வேட்பாளரை விட 22,123 வாக்குகள் அதிகமாகும். மிக அதிகபட்சமாக ஓமலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன் 1,18,846 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கு சரவணனுக்கு 85,551 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்த தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளர் 33,295 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

திமுக வேட்பாளர் பார்திபன், சேலம் வடக்கு தொகுதியில் 27,943 வாக்குகளும், வீரபாண்டியில் 23,553 வாக்குகளும், சேலம் மேற்கு தொகுதியில் 29,333 வாக்குகளும் அதிமுக வேட்பாளரை விட கூடுதலாக பெற்றார். ஒட்டு மொத்தமாக 6 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி, திமுக வேட்பாளர் பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார். இந்த 6 தொகுதியில் இடைப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் மேற்கு, சேலம் தெற்கு ஆகிய 5 தொகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வாக்குகளை அதிகளவு பிரிப்பார் என கருதப்பட்ட அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம், ஒட்டுமொத்தமாக 52,332 வாக்குகள் மட்டுமே பெற்று, 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3வது இடத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பிரபு மணிகண்டன் 58,662 வாக்குகளுடன் பிடித்தார்.

Related Stories: