×

கோனேரிப்பட்டி ஏரியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும்

ராசிபுரம், மே 25:  ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி ஏரியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர். ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டியில், சுமார்  20 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. போதமலை அடுத்த கீழுர்  சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யும் போது, இந்த ஏரிக்கு தண்ணீர் வரும். கோனேரிப்பட்டி  ஏரி சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதியையும்,  கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் கிணறுகளுக்கு நிலத்தடி நீராதாரமாக  இருந்தது.

முறையாக பராமரிக்கப்படாததால், ஏரிக்கு தண்ணீர்  வரும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலர் ஏரியை  சிறிது, சிறிதாக ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றி விட்டனர். எஞ்சியுள்ள நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள், செடி,கொடிகள் முளைத்துள்ளன.
ஊராட்சி நிர்வாகம் சார்பில், 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் இந்த ஏரியில் மராமத்து பணிகள்  மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பெயரளவுக்கு மரம், செடிகளை மட்டும் அகற்றினர். ஆனால், நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளவில்லை.  

இதனால் சமீபத்தில் மழை பெய்த போதிலும், ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம்  தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோனேரிப்பட்டி  சுற்றுவட்டார கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. எனவே,  போதமலை கீழூரில் இருந்து மழைநீர்  ஏரிக்கு வரும் வகையில், ஆக்கிரமிக்கப்பட்ட நீர்வரத்து வாய்க்காலை மீட்க வேண்டும். ஏரியில் உள்ள  ஆக்கிரிப்புகள் மற்றும் சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி, தூர்வாரி  ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lake ,Gonaripatti ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!