×

கிருஷ்ணகிரி தொகுதியில் செல்லாத 904 தபால் ஓட்டுகள்

கிருஷ்ணகிரி, மே 25: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் 904 தபால் ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாருக்கு 1902 தபால் ஓட்டுகள் கிடைத்தது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் அரசு ஊழியர்கள் வாக்களித்த தபால் ஓட்டுகளிலும் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபட்ட 4,480 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நாளான நேற்று முன்தினம், காலை 8 மணி வரை வந்து சேர்ந்த வாக்குகளை 4 மேசைகளுக்கு தலா 500 வாக்குகள் என்ற அடிப்படையில் எண்ணப்பட்டன. இதில் பல்வேறு காரணங்களால் 904 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. 3,576 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதில், காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லகுமாருக்கு 1,902 வாக்குகள் பதிவானது. அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கு 1,145 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதுசூதனனுக்கு 243 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஸ்ரீகாருண்யாவிற்கு 100 வாக்குகளும், அமமுக வேட்பாளர் கணேசகுமாருக்கு 17 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவில் 94 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதன்படி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.செல்லகுமார், அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை விட 757 வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தார்.

13 பேர் டெபாசிட் இழப்பு
கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் உள்பட 13 பேர் டெபாசிட் இழந்தனர். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி வாக்குகள், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் செல்லக்குமார் 1,56,765 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையாக ₹25 ஆயிரமும், எஸ்.சி, எஸ்டிக்கு ₹12,500 என டெபாசிட் தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் மொத்தம் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கினை பெற்றிருந்தால், அவர்களது டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். கிருஷ்ணகிரி தொகுதியை பொறுத்தவரை 11 லட்சத்து 51 ஆயிரத்து 369 வாக்குகள் பதிவாயிருந்தது. போட்டியிட்ட 15 வேட்பாளர்களில் அதிமுக வேட்பாளர் முனுசாமி, காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் ஆகிய இருவர் மட்டுமே 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தனர். அமமுக வேட்பாளர் கணேசகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதுசூதனன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஸ்ரீகாருண்யா உள்பட 13 பேர் தங்களது டெபாசிட்டை இழந்தனர்.  

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை சரிபார்க்க, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 5 வாக்கு சாவடிகளின் விவிபேட் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும் சேர்த்து 30 வாக்குசாவடிகளின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டு, அவை மின்னணு வாக்குகளுடன் சரிபார்க்கப்பட்டது.

Tags : constituency ,Krishnagiri ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...