×

கட்சியினரின் உள்ளடி வேலையால் வெற்றியை பறிகொடுத்த முனுசாமி

போச்சம்பள்ளி, மே 25:  கிருஷ்ணகிரி தொகுதியில் கட்சியினர் செய்த உள்ளடி வேலைகளால் வெற்றி வாய்ப்பு பறிபோனது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கே.பி.முனுசாமி முறையிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி  நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்  செல்லகுமாரும், அதிமுக சார்பில் கே.பி.முனுசாமியும் போட்டியிட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே முனுசாமிக்கு,  தம்பிதுரை ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது.

அதை நேரடியாக  தெரிவித்து, தேர்தல் பணிகளை செய்யாமல் இருந்து வந்தனர். எம்எல்ஏ மற்றும் எம்பியாக  பதவியேற்றதில் இருந்தே, தொகுதி பக்கமே போகாமல் இருந்ததால், சொந்த ஊரில் கூட  நுழைய முடியாமல் முனுசாமி துரத்தியடிக்கப்பட்டார். இந்நிலையில், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று, ஓட்டுக்கு பணத்தை அள்ளி வீசினார்.  ஆனால், அதை முழுமையாக வாக்காளர்களுக்கு கொடுக்காமல் கட்சி நிர்வாகிகளே தங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொன்டு, தங்களுக்கு  வேண்டிய சிலருக்கு மட்டுமே பாதிக்கு பாதி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
தொடர்ந்து, அதிமுக மத்தியில் நிலவி வந்த  உள்குத்து நடவடிக்கைகளால், கடுப்பாகிப்போன முனுசாமி சொந்த கட்சியினரை  நம்பினால், வெற்றி கிடைக்காது என்று தெரிந்து பாமகவை நம்பி களத்தில்  இறங்கினார். இதனால், ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள், உள்ளடி வேலைகளில் ஈடுபடத்  துவங்கினர். தேர்தலில் வேலை செய்யாமலும், ஓட்டு கேட்க கூட முனுசாமியுடன்  செல்லாமலும் தவிர்த்து வந்தனர்.

இதனையடுத்து, பாமகவின் சாதி ஓட்டுகள் கரை சேர்க்கும் என்ற நம்பிக்கை, வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலேயே முனுசாமிக்கு காணாமல் போனது. கிருஷ்ணகிரியில்  பாமக செல்லா காசானதற்கு அதிமுக மேல் உள்ள அதிருப்தி என்பது  மட்டும் காரணமில்லாமல், பாமகவின் சுயநல அரசியலையும் காட்டியது. கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை, அதிமுகவினர்  வாக்காளர்களுக்கு கொடுக்காமல், உள்ளடி வேலைகள் செய்ததால் முனுசாமி படுதோல்வி  அடைந்தார்.

 வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றிலேயே, செல்லக்குமார் முன்னணி என  அறிவிக்கப்பட்டபோதே மையத்திலிருந்த அதிமுக கரை வேட்டிகள் ஒவ்வொருவராக காணாமல் போனார்கள். செல்லக்குமார் வெற்றி உறுதியான நிலையில், டென்சனான முனுசாமி, நிர்வாகிகள் யார், யாரிடம் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை கணக்கெடுக்க கூறினாராம்.

வாக்காளர்களுக்கு பணத்தை கொடுக்காமல் அபகரித்த நிர்வாகிகளின் பட்டியலை எடுக்கும் பணியில், அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இது மாவட்ட நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Munusamy ,party ,
× RELATED தமிழ்நாட்ல பாஜ தவழும் குழந்தை: கே.பி.முனுசாமி ‘பங்கம்’