×

அரூர் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரம்

அரூர், மே 25: அரூர் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏக்கருக்கு 40 மூட்டை மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பரவலாக மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். கோபிநாதம்பட்டி கூட்ரோடு, தீர்த்தமலை, கோட்டப்பட்டி மொரப்பூர், கம்பைநல்லுர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிட்டுள்ளனர்.

பெரும்பாலான பகுதிகளில் தற்போது அறுவடை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நல்ல விளைச்சல் கிடைத்தால் ஏக்கருக்கு 35 மூட்டை முதல் 40 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். கோழி, கால்நடை தீவனத்திற்கும், உணவிற்கும், சத்துமாவு தயாரிப்பிலும் அதிக அளவில் பயன்படுத்துவதால் மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைக்கிறது. தேவை அதிகமாக இருப்பதால் அதிக பரப்பளவில் மக்காசோளத்தை விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. இதனால், சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. படைப்புழு தாக்குதலை தவிர பெரிய அளவில் வேறு எந்த பாதிப்பும் ஏற்படாதபட்சத்தில் ஏக்கருக்கு 50 மூட்டை வரையிலும் மகசூல் பார்த்து விடலாம். கால்நடை தீவனத்திற்கு அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவதால் ஆண்டுமுழுவதும் தேவை அதிகரித்துள்ளது. இதனால், ஆண்டுக்காண்டு சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது என்றனர்.

Tags : Harvesting ,area ,Arur ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...