×

6 சட்டமன்றத் தொகுதியிலும் இ.கம்யூ., கட்சிக்கு அதிக ஓட்டுகள்

திருப்பூர்,மே25:   திருப்பூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 6 சட்டமன்ற  தொகுதிகளிலும் இந்திய கம்யூ., கட்சி அதிக வாக்குகள் பெற்றது. தமிழகம்  முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி ஒரே  கட்டமாக நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம்  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, திருப்பூர் வடக்கு,  திருப்பூர் தெற்கு, கோபி, பெருந்துறை, அந்தியூர், பவானி ஆகிய 6 சட்டமன்ற  தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நேற்று முன்தினம் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு கலை அறிவியல் கல்லூரியில்  நடந்தது.

சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வாக்கு  எண்ணிக்கை நடந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கை இரவு 7.30  மணி மணியளவில் நிறைவு பெற்றது. இதில், இந்திய கம்யூ., கட்சி வேட்பாளர்  சுப்பராயன், தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக., வேட்பாளர்  எம்.எஸ்.எம்.ஆனந்தனை விட 93 ஆயிரத்து 368 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி  பெற்றார்.

சட்டமன்ற தொகுதி வாரியாக பெற்ற வாக்குகளின்  அடிப்படையில், அதாவது திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அந்தியூர்,  பவானி, பெருந்துறை, கோபி ஆகிய 6 தொகுதிகளிலும் இந்திய கம்யூ., கட்சி அதிக  வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக திருப்பூர் தெற்கு  சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூ., வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட 25  ஆயிரத்து 944 வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளார். திருப்பூர் வடக்கு  தொகுதியில் 14 ஆயிரத்து 620 வாக்குகளும் பெருந்துறையில் 4 ஆயிரத்து 652  வாக்குகளும், பவானியில் 17 ஆயிரத்து 574 வாக்குகளும், அந்தியூரில் 18  ஆயிரத்து 262 வாக்குகளும், கோபியில் 9 ஆயிரத்து 959 வாக்குகளும் கூடுதலாக  பெற்றுள்ளார்.

Tags : assembly constituency ,CPI ,party ,
× RELATED நாம் தமிழர் கட்சியில் இருந்து...