×

பாதுகாப்பு உபகரணம் இன்றி பணியாற்றும் சுகாதார பணியாளர்கள்


திருப்பூர்,  மே 25: பாதுகாப்பு உபகரணம் இல்லாமல், திருப்பூர் மாநகராட்சி பகுதியில்  துப்புரவு பணியாளர்கள் கழிவுகளை அகற்றும் அவல நிலை தொடர்கிறது. இதை  அதிகாரிகளும் கண்டும், காணாமல் இருந்து வருகின்றனர். உள்ளாட்சிகள்  மற்றும் தனியார் நிறுவனங்களில் துப்புரவு பணியில் ஈடுபடும்  தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மனித கழிவு  உள்ளிட்ட ஆபத்து மிகுந்த பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படும்போது மனிதர்களை  ஈடுபடுத்தக்கூடாது. இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என  நீதிமன்றமும் மற்றும் அரசும் உத்தரவிட்டுள்ளன.

ஆனால், திருப்பூர்  மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணியில் ஈடுபடும்  தொழிலாளர்கள் கையுறை, காலணி, ரிப்ளக்டர் ஜாக்கெட், முக கவசம் உள்ளிட்ட  எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தாமல், வெறும் கை, வெறும்  கால்களுடன் கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் நிரந்தர துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்கப்படுகின்றன.

தற்காலிகமாக நியமிக்கப்படும் பணியாளர்கள்  மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் சுய உதவி குழுவினர்  துப்புரவு பணி மேற்கொள்ளும்போது, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை.  இதே நேரத்தில், நிரந்தர துப்புரவு பணியாளர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் பயன்படுத்துவதில்லை.

துப்புரவு பணியை மேற்பார்வையிடும்  அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. ஆபத்து மிகுந்த துப்புரவு பணிகளில்,  பாதுகாப்பு இல்லாமல், கடும் துர்நாற்றத்துடன் கழிவுகள் அகற்றும் பணியில்  ஈடுபட்டுள்ள இத்தொழிலாளர்களுக்கு நோய் தாக்குதல் உட்பட கடும் ஆபத்துகள்  ஏற்படும் அபாயம் உள்ளது.

கழிவு அகற்றும் பணி குறித்து தனியார்  நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடும் உள்ளாட்சி அமைப்பு  மற்றும் அரசு அதிகாரிகள் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் உள்ளதால், உள்ளாட்சி  அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பற்ற முறையில்  மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்கின்றன.

Tags : Health workers ,
× RELATED கொரோனா போன்ற தொற்று நோய்களை...