கொழுமம் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல்

உடுமலை,மே25: உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் செல்லும் கொழுமம் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ளது கொழுமம். இக்கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில்,தாண்டேஸ்வரர் கோயில், கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் ஆகியன உள்ளன. அமராவதி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கொழுமம் பழனி செல்லும் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது. எனவே தினமும் இவ்வழியாக அரசு,தனியார் பேருந்துகள்,சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில் முன்பாக ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு எதிரே உள்ள சாலையோரம் வாரந்தோறும் சந்தை நடைபெறுகிறது. மேலும் கோயில் முன்பாகவே பேருந்து நிறுத்தமும் உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பேருந்தை விட்டு இறங்கி நடக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் கோயில் முன்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோயிலுக்கு சொந்தமான இடத்தில் எவ்வித அனுமதியும் இன்றி பூக்கடை,பழக்கடை மற்றும் தள்ளுவண்டிகளில் டிபன் கடை போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தற்போது கோட்டை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இச்சமயத்தில் தொடர் போக்குவரத்து நெரிசல் மற்றும் பக்தர்கள்,பாதசாரிகள் நடக்க முடியாத வண்ணம் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளவர்கள் மீது நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுத்து, கடைகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: