×

பாலக்காடு- திருச்செந்தூர் ரயிலை தொடர்ந்து இயக்க வலியுறுத்தல்

உடுமலை,மே25: பாலக்காட்டிலிருந்து தினமும் திருச்செந்தூர் வரை செல்லும் பயணிகள் ரயிலை மதுரை,திண்டுக்கல் என பாதி வழியில் நிறுத்துவதை தவிர்த்து முழு தொலைவும் இம்மாத இறுதிக்குள் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி,உடுமலை,பழனி,மதுரை வழியாக தினமும் திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் இம்மாத இறுதி வரை திண்டுக்கல் மற்றும் மதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி மே மாதம் துவகத்திலேயே பாலக்காடு பயணிகள் ரயிலானது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மதுரை வரையும்,வாரத்தின் பிற நாட்களில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

மதுரை- திருநெல்வேலி வரை கூடுதல் ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும், சென்னையிலிருந்து நெல்லை,தூத்துக்குடி,நாகர் கோயிலுக்கு கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் ஏற்படும் சிக்னல்கள் பிரச்னை காரணமாகவும் பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரயிலானது பாதி வழி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துதிருந்தது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அடுத்த வாரம் திறக்க உள்ளதால் தென் மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறைக்கு சென்ற மாணவ,மாணவிகள் ஊர் திரும்ப ஏதுவாக மே மாத இறுதிக்குள் பாலக்காடு- திருச்செந்தூர் ரயிலை பயண தூரம் முடியும் வரை இயக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை ரயில்வே பயணிகள் நலசங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பயணிகள் நல சங்க தலைவர் ஆடிட்டர் கந்தசாமி கூறுகையில், பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணி முடிந்த பின் பொள்ளாச்சி,உடுமலை நகர மக்களுக்கும், கேரள மக்கள் பழனி வந்து செல்வதற்கும் மிகுந்த பயனுள்ளதாக பாலக்காடு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது.

பழனி மட்டுமின்றி மதுரை,திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர் என ஆன்மீக பயணம் மேற்கொள்வோருக்கும் இந்த ரயில் சேவை மிகுந்த பயன் அளித்து வந்தது. தற்போது ஒரு மாதமாக இந்த ரயில் சேவை இடையிடையே நிறுத்தப்படுவது பயணிகளிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக பொள்ளாச்சி,உடுமலையில் பணியாற்றும் தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர் சென்று திரும்ப இந்த ரயிலை பயன்படுத்தி வந்தனர். தற்போது பள்ளி திறப்பதற்கு முன்பாக திருச்செந்தூர் ரயிலை அறிவிக்கப்பட்ட தூரத்திற்கு இயக்க ரயில்வே நிர்வாகம் உரிய எடுப்பதோடு, கோவையிலிருந்து நெல்லை, தூத்துக்குடி ராமேஸ்வரத்திற்கு இரவு நேர ரயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

Tags : Palakkad ,Tiruchirappalli ,
× RELATED கோடை வறட்சி எதிரொலி: ஆறுகள், அணைகள் வற்றின