×

மான் வேட்டை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

பொள்ளாச்சி, மே 25:  பொள்ளாச்சியை அடுத்த எரிசனம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் மான் கறி சமைப்பதாக வந்த தகவலையடுத்து, கடந்த 4ம் தேதி, வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வன குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்ப அங்குள்ள ஒரு வீட்டில் கடமான் கறி சமைக்கப்பட்டதையறிந்தனர். அங்கு மான் கறி சமைத்த, ஆனைமலை அருகே செம்மேட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன்(48) எனபவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையின்போது, பாலகிருஷ்ணன் மற்றும் பெரியபோதுவை சேர்ந்த சுந்தர்ராஜ்(41), மாரப்பகவுண்டன்புதூரை சேர்ந்த துரைசாமி(62), தமிழரசன்(35), வண்ணாமடையை சேர்ந்த பிரகாஷ்(29) ஆகியோர் சேர்ந்து, செமனாம்பதி வன பகுதியில் உலாவந்த கடமானை வேட்டையாடி சமைத்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் அனைவரும் குழல் துப்பாக்கிகளை,  தங்களாகவே தயாரித்து விலங்குகளை வேட்டையாட தயார் நிலையில் வைத்திருந்துள்ளனர்.

இதையடுத்து 5ம் தேதியன்று, பாலகிருஷ்ணன், துரைசாமி, பிரகாஷ் மற்றும் சுந்தர்ராஜ் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மானை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள், புதிதாக துப்பாக்கி தயாரிக்க வைத்திருந்த, மர கைபிடிகள் மற்றும் மர துப்பாக்கி தயாரிக்க தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

இதில் தலைமறைவான தமிழரசன் மற்றும் மானை வேட்டையாட துணையாக இருந்த மேலும் இருவரை வனத்துறையினர் தேடி வந்தனர். வனத்துறையினர் விசாரணையில் மூன்று பேரும் கேரளாவில் தலைமறைவானது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், மாரப்பகவுண்டன்புதூரில் உள்ள தனது வீட்டிற்கு இருவரையும் அழைத்து வந்தார்.

பின் நேற்று காலையில், கேரளாவுக்கு மீண்டும் தப்பிசெல்வதற்காக அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்த பகுதியில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தனர். தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, தப்பியோட முயன்ற தமிழரசன், கணேசன்(35), காளிமுத்து(55)ஆகிய 3 வரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின் கைது செய்யப்பட்டு, பொள்ளாச்சி ஜேஎம்1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,deer hunting ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...