தக்காளி, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் விலை உயர்வு

உடுமலை,மே 25:  கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சின்னவெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தரமற்ற விதைகள் மற்றும் விலைசரிவின் காரணமாக கடந்த 3 மாதமாக சாகுபடி பரப்பை குறைத்தனர். இதன் காரணமாக சந்தைக்கு தற்போது சின்னவெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதே போல 3 மாதங்களுக்கு முன்பு ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட்டால் ஆயிரம் பெட்டி( ஒரு பெட்டிக்கு 14 கிலோ) தக்காளி அறுவடை செய்த நிலையில் தற்போது 50 பெட்டி தக்காளியே கிடைக்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க உடுமலை தாலுகா செயலாளர் பாலதண்டாபாணி கூறுகையில்: கடந்த 3 மாதத்திற்கு முன்பாக பெரிய அளவில் விவசாயம் செய்த காய்கறி விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கான விலை கிடைக்கவில்லை. ஜனவரி மாதம் தக்காளி ஒரு பெட்டி(14 கிலோ) ரூ.30 முதல் ரூ.40 வரை விலை போனது.

தற்போது ஒரு பெட்டி ரூ.600 முதல் ரூ.620 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதே போல ஜனவரி மாதம் ரூ.6 முதல் ரூ.10 வரை கொள்முதல் செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது வரத்து குறைந்ததால் ரூ.40 முதல் ரூ.43 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பச்சை மிளகாயும் தற்போது கிலோ ரூ.47 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது சிறு,குறு விவசாயிகள் மட்டுமே இவற்றை குறைந்த பரப்பில் பயிரிடுகின்றனர். நல்ல விலை கிடைத்து சிறு விவசாயிகள் மகிழ்ந்த போதும், கடந்த காலங்களில் பெரி அளவில் காய்கறி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டமடைந்ததாலேயே தற்போது இவற்றின் வரத்து சந்தைக்கு குறைந்துள்ளது. தரமற்ற விதைகள்,தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல்,சாகுபடி பரப்பு குறைந்தது ஆகியவற்றால் தக்காளி,சின்னவெங்காயம்,பச்சைமிளகாய் விலை உயர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: