ரயில் நிலையம் ஆர்.எம்.எஸ் ஆபிஸ் முன் பார்க்கிங் வசதி இல்லாமல் மக்கள் அவதி

கோவை, மே 25: கோவை ரயில்நிலையத்தின் முன்புறம் ஆர்.எம்.எஸ் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு வருவோர் வாகனம் நிறுத்த இடமில்லாமல் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். கோவையிலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு நாள்தோறும் மக்கள் வேலைக்காக ரயிலில் சென்று வருகின்றனர்.

அதே போல் ரயில்நிலையத்திற்கு தபால் மூலம் பார்சல் அனுப்பவும் மக்கள் அதிக அளவில் வருகின்றனர். இதனிடையே அவ்வாறு கோவையிலிருந்து செல்லும் பயணிகள் பெரும்பாலும் தங்கள் இருசக்கர வாகனத்தை ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு அதன் பின் ரயிலில் செல்வார்கள். அதற்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும். ஆர்.எம்.எஸ் வருவோர் பார்க்கிங் இடத்திற்கு அருகில் ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு வாகனங்களை நிறுத்துவது வழக்கம்.

இந்நிலையில் கோவை ரயில்நிலைய பின்புறம் இயங்கி வந்த இருசக்கர வாகன நிறுத்தம் முன்பக்கத்திற்கு மாற்றப்பட்டது. பின்புறம் இயங்கி வந்த இடத்தில் மல்டிலெவல் பார்க்கிங் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு ஆண்டு காலமாக இந்த கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் வாகனத்தை  ரயில் நிலையத்தின் முன்பகுதியில் நிறுத்துவதால், வாகனங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதன் காரணமாக ஆர்.எம்.எஸ் அலுவலகத்திற்கு வருவோர் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து ஆர்எம்எஸ் அலுவலகம் வரும் மக்கள் கூறுகையில், ‘‘பார்சல் அனுப்ப வரும் போது வாகனம் நிறுத்த இடமில்லாமல் தவிக்க வேண்டி உள்ளது. ஆர்.எம்.எஸ் பார்க்கிங் என வாகனம் நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: