×

அம்மன்குளம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அடிப்படை வசதி செய்ய வலியுறுத்தல்

கோவை, மே 25: கோவை மாநகராட்சிக்குட்பட்ட அம்மன்குளம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாநகராட்சி 70வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அம்மன்குளம் புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. அவற்றில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வாலாங்குளம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் வசித்த இவர்களுக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இந்த குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.
 
இந்நிலையில், இங்கு சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், நோய் பரவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அம்மன்குளம் புதிய ஹவுசிங் யூனிட்  குடியிருப்புவாசிகள் கூறியதாவது: ஆயிரக்கணக்கானோர் வசித்து வரும் இப்பகுதியில், மாநகராட்சிப் பணியாளர்கள்  குப்பையை அப்புறப்படுத்தாததால், ஆங்காங்கே குப்பை குவிந்துள்ளது.

கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கும் அளவுக்கு, கால்வாய்களில் குப்பை அடைத்துக் கொண்டிருக்கிறது. எனவே, குடியிருப்புகளை சுற்றியுள்ள கால்வாய்களை தூர்வாரி, அவற்றின் மீது சிமென்ட் மூடிகள் அமைக்க வேண்டும். முறையாக குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடியிருப்புகளில் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர்த் தொட்டிகள், பயனற்றுக் கிடக்கின்றன.

குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, புதர்மண்டிக் காணப்படுகிறது.மேலும், விளையாட்டு உபகரணங்களும் இல்லை. புதர்களை அகற்றி,விளையாட்டு உபகரணங்கள் அமைத்தால் சிறுவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.மேலும், இப்பகுதியில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். இதேபோல, அருகில் உள்ள பழைய ஹவுசிங் யூனிட் பகுதியிலும், அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவிக்கின்றனர். தேங்கியுள்ள குப்பை, திறந்த வெளி கழிவு நீர்க் கால்வாய்களால் சுகாதாரச் சீர்கேடுஏற்படுகிறது. சௌரிபாளையத்தில் இருந்து இப்பகுதிக்கு வரும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த சாலையைச் சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

Tags : facilities ,Ammanankulam Housing Board Board ,
× RELATED கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும்...