பள்ளி மாணவர்களுக்கு வழங்க 1.70 லட்சம் பாட புத்தகம் தயார்

ஈரோடு, மே 25: ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்க 1.70 லட்சம் பாடப்புத்தகங்கள் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று துவங்கியது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் வழங்க மாவட்ட கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் பாடநூல் கழகம் மூலமாக அச்சிடப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வழங்க பாடப்புத்தகங்கள் ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒவ்வொரு கல்வி மாவட்ட அலுவலகத்திற்கு பாடப்புத்தகம் பிரித்து அனுப்பும் பணி நேற்று துவங்கியது.

மாவட்டம் முழுவதும் 1.70 லட்சம் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் புத்தகங்கள் சரி பார்க்கப்பட்டு பள்ளி திறப்பதற்கு முன்பு ஒவ்வொரு பள்ளிக்கும் எவ்வளவு தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2018-19ம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டது. இந்தாண்டு 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12ம்வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டு புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகம் அச்சிடப்பட்டு பாடநூல் கழகம் மூலம் ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஈரோடு, பெருந்துறை, சத்தி, பவானி, கோபி என 5 கல்வி மாவட்டங்கள் உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகம் வட்டார கல்வி அலுவலகத்திற்கும், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகம் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகம் முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திற்கு 1.70 லட்சம் பாடப்புத்தகம் வந்துள்ளது.

இவை அனைத்தும் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு தேவையான அளவு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு இந்த புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலகம் மூலமாக வரும் திங்கள்கிழமை முதல் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தேவையான புத்தகங்கள் பிரித்து அனுப்பி வைக்கப்படும். அதன்பின், பள்ளி திறக்கும் ஜூன் 3ம்தேதி அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: