×

பராமரிப்பு இல்லாத மயானம்


ஈரோடு, மே 25: ஈரோடு அருகே பராமரிப்பு இல்லாத மயானத்தை சீரமைத்து அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரச்சலூர் பேரூராட்சி நாச்சிவலசு பகுதியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர், கழிப்பிடம், சாலை, மயானம் என அடிப்படை வசதிகள் இல்லை.

குறிப்பாக, மயானம் இருந்தும் மயானத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து கிடப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சாலையின் இரு புறமும் முட்செடிகள் படர்ந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சடலத்தை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதே போல மாயனத்திற்குள் தண்ணீர் வசதி, தகன மேடை, தெருவிளக்கு, சுற்றுச்சுவர் என அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீடித்து வருவதாகவும், இது தொடர்பாக பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் மயானத்தை சீரமைத்து அடிப்படை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு