நொய்யல் ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

திருப்பூர்,மே25:திருப்பூர் மங்கலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய ஆற்றில் இறைச்சி கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் அடுத்த மங்கலத்தில் இருந்து வஞ்சிப்பாளையம் செல்லும் வழியில் நொய்யல் ஆறு இருக்கிறது. இதில், சிறுவர்கள் அவ்வப்போது குளித்து விளையாடுவது வழக்கம். நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து போதுமானதாக இல்லாததால், இறைச்சி கடைக்காரர்கள் கோழி, மீன், மாடு உள்ளிட்ட இறைச்சிக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் பாலத்திற்கு கீழ் கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது.

மங்கலம் நால் ரோடு பகுதியில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் இறைச்சி கடைகள் ஏராளமாக செயல்பட்டு வருகிறது. இங்கு இயங்க கூடிய கடையில் இருந்து கழிக்கப்படக்கூடிய குடல், செதில்கள், தோல்கள் ஆகியவை மூட்டைகளில் கட்டப்பட்டு, தினமும் இரவு நேரங்களில் ஆற்றில் வீசப்படுகிறது. அவை ஓரிரு நாட்களில் அழுகி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், இப்பகுதியை கடந்து செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், அருகில் உள்ள வணிக வளாகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள்,பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, பலமுறை அதிகாரிகள் மட்டும் போலீசிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: திருப்பூரில் இருந்து பல்லடம் செல்வதற்கு பயன்படுத்தப்படும் பிரதான சாலையாக வஞ்சிபாளையம் வழியை பயன்படுத்தி வருகிறோம். இறைச்சி கடைகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை ஆற்றின் கரையில் கொட்டுகின்றனர். இதனால், வாகனஓட்டிகள் உட்பட பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுகிறது.

ஆற்றில் குளிக்கின்ற சிறுவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள், தோல் பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை அகற்றுவது தொடர்பாக, சுகாதார ஆய்வுக் குழு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: